யார் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்!!

     -MMH
     கொரோனாவின் இரண்டாவது அலை இந்திய மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரான போரில் நம்மை பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழியாக கருதப்படுகின்றது. தடுப்பூசி செயல்முறையை அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் செயல்முறை துவங்கிவிட்டது.

மறுபுறம், தடுப்பூசி குறித்து பலருக்கு இன்னும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்பதை இங்கே காணலாம்.

யார் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்:-

தடுப்பூசி செயல்முறை தொடங்கிய பின்னர், சிலருக்கு தடுப்பூசியின் சில பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது பற்றி தெரிய வந்தது.

இதன் பின்னர், கோவிஷீல்ட் (Covishield) மற்றும் கோவாக்சின் ஆகியவற்றின் ஃபேக்ட் ஷீட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை யாரெல்லாம் செலுத்திக்கொள்ளக்கூடாது என்பது பற்றி இதில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வாமை இருந்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம்

தடுப்பூசியில் (Vaccination) பயன்படுத்தப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு மூலப்பொருளுக்கோ, அல்லது பிற வகையான ஒவ்வாமையோ இருந்தால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம் என கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினின் ஃபேக்ட் ஷீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டோஸுக்குப் பிறகு எதிர்வினைகள் வெளிவந்தால் இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப் படியே இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, காய்ச்சல் இருந்தாலோ, கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளார்கள். முதல் டோசுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்குமான இடைவெளியில் காய்ச்சலோ, கொரோனா தொற்றோ ஏற்பட்டாலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே இதை பற்றி முடிவெடுக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களும் (Pregnant Women) பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம் என கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட்டின் ஃபாக்ட் ஷீட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன்னர், சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணரிடம் உங்கள் உடலின் மருத்துவ நிலை பற்றிய தகவலை அளிக்குமாறு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டின் ஃபாக்ட் ஷீட்டுகள் கேட்டுக் கொண்டுள்ளன. உங்கள் மருத்துவ நிலையை குறிப்பிட்ட பின்னரே தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவை தெரிவிக்கின்றன.

-சுரேந்தர்.

Comments