அடையாள அட்டை இருந்தால் போதும்... இ-பதிவு தேவையில்லை... சென்னையில் இ-பதிவு முறையில் தளர்வுகள் அறிவிப்பு!!
மருத்துவர்கள், சுகாதார துறையினர், ஊடகத்துறையினர், வழக்கறிஞர்கள் பணி நிமித்தமாகச் செல்லும்போது அடையாள அட்டை காண்பித்தால் போதும் என்றும் இ-பதிவு முறை அவசியமில்லை என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணங்களுக்கு இ பதிவு கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்யும் பொதுமக்கள் இ பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அதேபோல சென்னை பெருநகரில் ஒரு பகுதியில் இருந்து மற்ற செக்டார் பகுதிக்குச் செல்ல இ பதிவு முறை அவசியம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், போலீசார் தற்போது இதில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதாவது மருத்துவர்கள், சுகாதார துறையினர், ஊடகத்துறையினர், அத்தியாவசிய பணியாளர்களுக்கு இ பதிவு தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அரசு ஊழியர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், தூதரக அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பணி நிமித்தமாகச் செல்லும்போது அடையாள அட்டை காண்பித்தால் போதும் என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், அனுமதிக்கப்படும் மேற்கண்ட துறையினர் மற்றும் அவர்களது வாகனங்கள் தடுக்கப்பட்டு, அனுமதிக்க மறுக்கப்படும் நிலையில் தொடர்புக்குச் சென்னை பெருநகர மக்கள் தொடர்பு உதவி ஆணையாளர் தொலைப்பேசி எண் 23452320 மற்றும் 9498130011 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்குப் பிரத்தியேகமாகத் தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சென்னை பெருநகரில் நேற்று மாலை 06.00 மணி வரை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட தணிக்கையில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 3,315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 4,107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாஸ்க் அணியாமல் சென்றது தொடர்பாக 3044 வழக்குகளும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது தொடர்பாக 345 வழக்குகளும், பதிவு செய்யப்பட்டுள்ளது.
-செந்தில் முருகன்,சென்னை.
Comments