பொள்ளாச்சி அருகே பெண்களை கொன்று பிணத்தை வாய்க்காலில் வீசிய நபர் யார்!!

   -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரே நேரத்தில் 2 பெண்களிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபர் அந்த பெண்களை கொன்று பிணங்களை வாய்க்காலில் வீசி சென்றுள்ளார். இதையடுத்து வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

பொள்ளாச்சியை அடுத்துள்ள மடத்துக்குளம் அருகே நாட்டுக்கல்பாளையம் பகுதியில் அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன கால்வாயில் இருந்து பிரிந்து கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் காயங்களுடன் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் நேற்று முன்தினம் காலையில் அடுத்தடுத்து பிணமாக கிடந்தனர்.

இது குறித்து கணியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு சிவந்த நிறத்துடன் ஆடையில்லாமல் பிணமாக கிடந்த பெண்ணின் வலது கையில் நாகராஜ் என்று ஆங்கிலத்தில் டாட்டூ வரையப்பட்டு இருந்தது. மேலும் அந்த பெண்ணின் வலது பக்க நெற்றியில் வெட்டு காயம் இருந்தது.

மாநிறமாக இறந்து கிடந்த மற்றொரு பெண் நைட்டி அணிந்து இருந்தார். நெற்றியில் சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு வைத்துள்ளார். 2 காதுகளில் தோடுகள் இல்லை. வலது காலில் மெட்டியும், அதனுடன் ஒரு இரும்பு வளையம் ஒன்றும், இடது கை மோதிர விரலில் மோதிரம் ஒன்றும், வலது கையில் கவரிங் வளையல் ஒன்றும் அணிந்துள்ளார். இந்த பெண்ணின் இடது முன் கை மற்றும் வலது காலில் சிராய்ப்பு காயம் உள்ளது. இதையடுத்து அந்த 2 பெண்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த 2 பெண்களும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? இவர்களது இறப்புக்கான காரணம் என்ன? என்று போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், பழனி, தாராபுரம் பகுதி போலீஸ் நிலையங்களில் பெண்கள் மாயம் என கடந்த 2 நாட்களில் வழக்குகள் ஏதாவது பதிவாகி உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வந்தார்கள். சிவந்த நிறத்தில் பிணமாக கிடந்த பெண்ணின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதாலும், அவர் நிர்வாண நிலையில் கிடந்ததாலும் அவரை மர்ம ஆசாமிகள் கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து வீசி இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மாநிறத்தில் காலில் சிராய்ப்பு இருந்த மற்றொரு பெண்ணும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் பிணமாக மீட்கப்பட்ட பெண்கள் யார்? என்று அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் நெற்றியில் காயத்துடன் கையில் நாகராஜ் என்று டாட்டூ எழுதப்பட்டிருந்த நிலையில் பிணமாக கிடந்த பெண், உடுமலை இந்திரா நகரை சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி கோகிலாமணி (வயது 45) என்பது தெரியவந்தது. மற்றொரு பெண் உடுமலை எஸ்.வி.புரத்தை சேர்ந்த முத்தையா என்பவரின் மனைவி கீர்த்தனா (40) என்றும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் தோழிகள் என்றும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று கோகிலாமணி வீட்டிற்கு கீர்த்தனா ஒரு வாலிபருடன் வந்துள்ளார். பின்னர் கீர்த்தனா மற்றும் கோகிலாமணி ஆகியோரிடம் அந்த வாலிபர் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், கீர்த்தனா மற்றும் கோகிலாமணி ஆகிய இருவரையும் அந்த வாலிபர் கொலை செய்து பின்னர் இருவரது உடல்களையும் வாகனத்தில் கொண்டுவந்து, காரத்தொழுவு பகுதியில் உள்ள அமராவதி கிளை வாய்க்காலில் போட்டு சென்று இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து முதலில் மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். அவரை பிடித்தால்தான் 2 பெண்களும் எப்படி கொலை செய்யப்பட்டார்கள்? என்று தெரியவரும். 2 பெண்களிடம் ஒரே நேரத்தில் உல்லாசம் அனுபவித்து பின்னர் அவர்களை கொலை செய்து பிணங்களை வாய்க்காலில் வீசிச்சென்ற கொடூரம் அந்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments