நீடாமங்கலத்தில் நோய்,பரவலை தடுக்கும் வகையில் சமூக ஆர்வலர்களும், காவல்துறையும் கடும் முயற்சி..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்றது நீடாமங்கலம் ரயில்வே கேட். ஆட்டோக்களில் பின்புறத்தில் திண்டுக்கல்லுக்குப் பூட்டு நீடாமங்கலத்துக்கு கேட்டு, என வாசகம் எழுதும் அளவிற்கு பிரபலமானது. பல்வேறு மார்க்கத்திற்கான ரயில்கள் இவ்வூர் வழியாக செல்வதாலும்.
அரசு நெல் கொள்முதல் செய்து பல்வேறு ஊர்களுக்கு வேகன்கள் மூலமாக அனுப்பி வைப்பதாலும், பல்வேறு ஊர்களுக்கு முக்கிய நெடுஞ்சாலை வழி போக்குவரத்தில் இருப்புப் பாதை அமைந்திருப்பதாலும் இங்கு அடிக்கடி கேட் மூடப்படும். சில நேரங்களில் திறப்பதற்கு அரை மணி ஒரு மணி நேரம்கூட ஆகும் இதனால் முக்கிய கடைத்தெரு ஸ்தம்பித்துப் போய்விடும்.
இந்நிலையில் ஊரடங்கு கால கூட்டநெரிசல் மிக அதிகமாக காணப்பட்டதால் வர்த்தக சங்கம் காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன, அதன்படி தமிழக அரசு வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்ட கால நேரத்திற்குள் கடைகள் அனைத்தையும் மூடிவிடவேண்டும். நகருக்குள் வரும் அனைத்து முக்கிய வீதிகளிலும் தடுப்பு அமைத்து கடைத்தெரு பகுதிக்கு வரும் இரு சக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டு, நடந்து சென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் சமூக இடைவெளி வட்டம் போடப்பட்டு அதில் நின்று பிறகு ஒவ்வொருவராக செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். கூட்டம் கூடாமல் கலைந்து செல்லவும், அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் காவலர்களும், தன்னார்வலர்களும் வேண்டுகோள் செய்தபடியே உள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் அனைத்து பகுதிகளிலும் சானிடைசர் தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் அடிப்பது, ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு செய்வது போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ள காரணத்தால் தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருவதாக சுகாதாரத்துறையினர் கவலை தெரிவித்து வருகின்றனர் . அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திருமலைக்குமார், ரைட் ரபீக், ஈசா.
Comments