ஆபாச ஆசிரியர்களுக்கு கவிஞர் சாய் வைஷ்ணவி சவுக்கடி !!

-MMH

                                                                      கவிஞர் சாய்வைஷ்ணவி

சில்மிஷ சில்லறைகளின் முகத்திரையை கிழிப்போம் என பொங்கி எழுகிறார், சாய் வைஷ்ணவி. பள்ளியில் படிக்கும்போது ஒரு காமாந்தகார ஆசிரியரால் மாணவிகள் பட்ட வலிகளையும் வேதனைகளையும் விளக்குகிறார். சிறகுகள் விரிக்க பூமியில் சில காலம் வசிக்க வந்ததாக கூறும் கவிஞர் சாய் வைஷ்ணவி சினம் பாட்டன் பாரதியின் ரவுத்திரம் பழகு வரிகளை நினைவுபடுத்துகிறது!!

சில்மிஷ சில்லறைகளின் முகத்திரையை கிழிப்போம்...!!

சென்னை பத்மசேஷாத்திரியின் செய்திகளை தொடர்ந்து தினமும் சில பள்ளி ஆசிரியர்களும் கோச்களும் பிள்ளைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. நகரங்களில் வாழும் பெண்கள் தங்களுக்கு நடக்கும்  பாலியல் துன்புறுத்தல்களை தைரியமாக வெளியே சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

ஆனால் ஊர் பகுதியிலும் கிராமங்களிலும் உள்ள பெண்கள் இதுபோன்ற அல்லது இதைவிட மோசமான சம்பவங்களை இன்னும் கூட வெளியில் சொல்லாமல் எதிர்காலம் ,மானம் ,ஊர்வாய் அது இது என்று தமக்கு தாமே வேலியை அமைத்துக் கொண்டு தங்களையும் ஏமாற்றி கொண்டு குற்றவாளிகளையும் காப்பாற்றி விடுகின்றனர்.

ஒவ்வொரு பெண்ணும் நிச்சயம் அப்படிப்பட்ட ஒருசில மனிதர்களை கடக்காமல் இருந்திருக்க முடியாது. பத்மசேஷாத்திரியின் செய்திகள் வெளிவந்த போது என் ஆறாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் நினைவுதான் வந்தது. அப்பொழுதே அவருக்கு ஐம்பது வயதிருக்கும். இருபாலர் படிக்கும் பள்ளியில் அவர் ஆறாம் வகுப்பாசிரியர்.என் பக்கத்து வகுப்பு என்பதால் எங்கள் ஆசிரியர் இல்லாத சமயத்தில் அடிக்கடி எங்கள் வகுப்பில் நுழைந்து விடுவார்.

அவர் மாணவிகளின் கண்களை பார்த்து பேசியதாக நினைவில்லை. கையில் எப்போதும் ஒரு குச்சி வைத்திருப்பார். ஏமாறும் போது மாணவிகளின் ஆடைக்குள் குச்சியை விட்டு பார்த்து சிரித்துக்கொள்வார். இதெல்லாம் உடன் படிக்கும் மாணவர்கள் முன்னிலையில் நடக்கும். கிறிஸ்தவ பள்ளி என்பதால் அடிக்கடி பிரேயர் செய்ய வேண்டி இருக்கும். 

அந்த சமயத்தில் எல்லாரும் கண்களை மூடிக்கொண்டு இருந்தால் நெற்றியில் நாமமிட்ட இவர் மட்டும் ஏதாவது மாணவியிடம் நின்று சில்மிஷம் செய்து கொண்டிருப்பார். சம்பந்தப்பட்ட மாணவிகள் அனைவரும் பெற்றோர் இல்லாத ஆசிரமத்தில் வளரும் குழந்தைகள்.சொல்வதற்கும் அப்படி சொன்னாலும் தட்டி கேட்பதற்கும் ஆள் இல்லை என்ற தைரியத்தில் அவன் செய்த கீழ்தரமான செயல்களை வெளியில் சொல்ல அன்று எங்களுக்கு துணிச்சல் இல்லை.

வகுப்பில் மட்டுமல்ல. கண்ணில் படும் அத்தனை மாணவிகளையும் துன்புறுத்துவான். எதிர் கேள்வி கேட்டால் கையிலிருக்கும் பிரம்பால் தோலை உரித்து விடுவான். அவன் பொருட்டு அந்த பள்ளியில் இருந்து ஒரு வருடத்திலேயே வெளிவந்த மாணவிகளில் நானும் ஒருத்தி. ஆனால் வீட்டில் இதுபற்றி வாய் திறந்ததில்லை. நம் காலங்களில் இதையெல்லாம் வீட்டில் சொல்லும் அளவிற்கு தைரியம் இருந்திருந்தால் இன்று எந்த ஒரு ஆசிரியரும் இதுபோன்ற செய்கையில் ஈடுபட கொஞ்சமேனும் பயந்திருப்பார்கள்.

நாகரீகம், விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்பம் இன்னும் பல வளர்ச்சிகள் இருந்தாலும் மனநிலைகளில் பெரிதாக மாற்றம் வந்துவிடவில்லை. கிராமப்புறங்களிலும் ஊர்ப்பகுதிகளிலும் இருக்கும் சில்மிஷ சில்லறைகளின் முகத்திரைகளை கிழித்து வெளிச்சத்திற்கு கொண்டு வருவது பிள்ளைகளின் கையில் தான் இருக்கிறது. இதற்கென இப்போது நிறைய வசதிகள் வந்துவிட்டது பாராட்டுக்குரியது.

மாணவிகள் தங்கள் புகாரை அரசு கொடுத்துள்ள குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம். அல்லது நம்பிக்கைக்குரியவர்களிடம் பகிர்ந்து கொண்டு நடவடிக்கை எடுக்க செய்யலாம். எத்தனையோ நல்லாசிரியர்கள் இருக்கும் போது இதுபோன்ற சாக்கடைகளின் வீச்சத்தை ஒளித்துக் கட்ட வேண்டியது அவசியமான ஒன்று என்று கடுமையாக சாடுகிறார், கவிஞர் சாய்வைஷ்ணவி !

ரவுத்திரம் பழக கற்றுத் கவிஞர் சாய்வைஷ்ணவி கோபம் நியாயமானதே !!

-தொகுப்பு : ஊடகவியலாளன் ஆர்.கே. பூபதி.

Comments