முழு ஊரடங்கு முடங்கியது தஞ்சை மாநகரம்!!

 

-MMH

                   புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மருந்தகம் திறந்திருந்த காட்சி

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று முதல் ஒரு வார காலத்திற்கு போடப்பட்டுள்ளது. அதன் முதல்நாளான நேற்று திங்கட்கிழமை தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் வெளியில் எங்கும் பெரிதாக நடமாட வில்லை .

                                     புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலை

நேற்று காலை முதலே தஞ்சை மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவலர்களும் வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அனுமதியற்ற வாகனங்கள் வருகின்றனவா  என்றும்  அனாவசியமாக வெளியில் நபர்கள் சுற்றிக்கொண்டு இருக்கிறார்களா என்றும் பார்ப்பதற்காக  காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.  பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக அனுமதிக்கப்பட்டனர். இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் போன்ற வாகனங்களில் வந்த நபர்களை காவல்துறையினர் அடையாள அட்டை இருக்கின்றதா என்றும்,  எந்தப் பணிக்காக செல்கின்றீர்கள் என்றும் எந்த ஊருக்கு போகிறீர்கள் என்றும்  கேட்டு அவர்கள் திருப்தி அடைந்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

                                                                           புதுக்கோட்டை சாலை

முக கவசம் அணியாதவர்கள், முறையான அனுமதி பெறாதவர்கள், தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்கள் அனைவரையும் எச்சரித்து அவர்களுக்கு அபராத தொகையை விதித்தனர் . அனுமதிக்கப்பட்ட நேரங்களில் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  E-comm வணிக நிறுவனங்களின்  வாகனங்கள்  ஆவணங்கள் சரி பார்ப்புக்கு  பின்னர் அனுமதிக்கப்பட்டது.

                                                                        மாதாக்கோட்டை சாலை

பெரும்பாலான மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் தங்களது சேவையை தொடர்ந்து செய்து வருகின்றன. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் , ராமநாதன் ரவுண்டானா, மருத்துவக்கல்லூரி சாலை, மாதாகோட்டை சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை ஆகியவற்றில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து பொதுமக்களின் ஆவணங்களை  சோதனைகளை செய்து பின்னர் தொடர்ந்து பயணிப்பதற்கு அனுமதித்தனர். 

பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு நல்கினர் என்று காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த ஊர்அடங்கு முழு பலனை தராது என்பதே எல்லோருடைய கருத்துமாக இருக்கின்றது. 

நாளைய வரலாறு செய்திக்காக 

-V.ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments