சிங்கம்புணரி அருகே அரசுப் பேருந்து விபத்து!!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா முறையூருக்கும் மருதிப்பட்டிக்கும் இடையே உள்ள பாலத்தின் அருகில் அரசுப் பேருந்தின் டயர் மண்ணில் புதைந்து விபத்துக்குள்ளானது.
மேலூரிலிருந்து மருதிப்பட்டிவரை வந்து செல்லும் அரசு பேருந்து இரு தினங்கள் முன்பு மேலூரில் இருந்து மருதிப்பட்டி வந்து கொண்டிருந்தது. அப்போது முறையூருக்கும் மருதிப்பட்டிக்கும் இடையே உள்ள பாலத்தின் அருகில் வந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்துக்கு வழிவிடுவதற்காக அரசு பேருந்தின் ஓட்டுநர் சாலை ஓரமாக பேருந்தை இயக்கி உள்ளார். அந்தச் சாலை புதிதாக சாலை போடப்பட்ட சாலை என்பதால் ஓரங்களில் புதிதாக மண் அணைக்கப்பட்டுள்ளது. அந்தப் புதிய மண்ணில் அரசு பேருந்தின் ஒரு பகுதி டயர் முழுவதும் மண்ணில் புதைந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயனிகளுக்கு எந்த விதமான காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினர். உடனே தகவல் அறிந்த எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு மேலூர் பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு மண்ணில் புதைந்த அரசு பேருந்தை பத்திரமாக மீட்டனர். புதிதாக போடப்பட்ட சாலையில், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் கவனமாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்களும் காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்தனர். அரசுப் பேருந்து விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ராயல் ஹமீது , அப்துல்சலாம்.
Comments