கோவிஷீல்டு தடுப்பூசி விலையைக் குறைத்தது சீரம் நிறுவனம்..!!

  -MMH

மாநில அரசுகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.400ல் இருந்து ரூ.300 ஆக குறைப்பதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச்  சேர்ந்த சீரம் நிறுவனம், ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த 'ஆக்ஸ்போர்டு ' பல்கலையுடன் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியைத்  தயாரித்து வருகிறது.

இந்தத் தடுப்பூசிக்கான விலையை சீரம் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் அதிகரித்தது. அதன்படி, ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி விலை மத்திய அரசுக்கு ரூ.150க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 

இந்நிலையில் சீரம் நிறுவனம் தலைவர் அதார் பூனவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுகளுக்கான விலை ரூ.400ல் இருந்து ரூ.300 ஆக குறைக்கப்படுகிறது.

இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பணம் மிச்சப்படுத்தப்படுவதுடன், ஏராளமானோருக்கு தடுப்பூசி கிடைக்க உதவும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

-சோலை ஜெய்க்குமார், Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments