சோகத்தின் உச்சியில் ஸ்டாலி மருத்துவமனை!!
சென்னையில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னை மட்டுமின்றி பொன்னேரி, ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, மற்றும் வடசென்னையில் ராயபுரம், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், அத்திப்பட்டு வியாசர்பாடி அரக்கோணம், திருத்தணி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் கொரோனாவின் பரவல் வேகமெடுத்துள்ளது.
இந்த பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க முடியவில்லை. நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி இல்லாததால் நேற்று மட்டும் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் செயற்கை சுவாச சிலிண்டர்களுடன் பல மணிநேரம் காத்திருந்தனர். இதுபோல் கொரோனா வார்டில் இறந்தவர்களின் சடலங்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக படுக்கையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் பக்கத்து படுக்கையறையில் இருந்த நோயாளிகள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் நேற்று கொரோனா நோயாளிகளின் உடல்களும், மற்ற சிகிச்சைகளில் இறந்தவர்களின் உடல்களும் பிணவறையில் ஒன்றோடு ஒன்றாக இருந்ததால் பிணவறை ஊழியர்களுடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொரோனா நோயாளி உடலில் உள்ள கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது என குற்றம்சாட்டினர். மேலும் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் பிணவறை முழுவதும் நிரம்பி இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.
மருத்துவமனை கண்காணிப்பாளர், பிணவறை, வார்டு பொறுப்பாளர், மருத்துவர் ஆகியோர் கையொப்பமிட்டு சடலம் கைக்கு கிடைக்க 5 மணி நேரத்துக்கும் மேலாவதால் உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
கொரோனா நோயால் இறந்தவர்களின் உடலை சுகாதார உதவி ஆய்வாளர் பெற்று சுடுகாட்டில் இறுதி மரியாதை செய்ய வேண்டும். இதில் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதால் இறந்தவர்களின் உறவினர்கள் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், பிணவறை முழுவதும் சடலங்கள் நிரம்பி வழிகிறது. சுகாதாரத்துறையும், அரசும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளன.
-கார்த்திக், தண்டையார்பேட்டை.
Comments