கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறப்பு!!

    -MMH

     சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் பகுதியில் மகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்காலிக ஊழியராக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது மகாமணியின் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் பாப்பாத்தி தனது கணவரின் இறப்பை அறிந்து மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்கிடையில் இறுதி சடங்குகள் நடத்துவதற்காக மகாமணியின் சடலத்தை மாதவரம் சுடுகாட்டிற்கு உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். 

இந்நிலையில் தனது கணவரின் முகத்தை பார்ப்பதற்காக சுடுகாடு வரை சென்ற பாப்பாத்தி திடீரென கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார். இவ்வாறு கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-கார்த்திக், தண்டையார்பேட்டை.

Comments