கொலை வழக்கு!! ஹைகோர்ட் நீதிபதிகள் கருத்தை செய்தியாக்குவதா!! மீடியா மீது பாயும் தேர்தல் ஆணையம்!!

   -MMH

சென்னை: கொரோனா பரவலுக்கு காரணமான தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்தாலும் தவறே இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால் நீதிபதிகள் தெரிவித்த கருத்தை எல்லாம் செய்தியாக வெளியிடுவதா? என ஊடகங்கள் மீது தேர்தல் ஆணையம் பாய்ந்துள்ளது.

கரூர் சட்டசபை தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வலியுறுத்தி அதிமுக வேட்பாளரான அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பெஞ்ச் அண்மையில் விசாரித்தது.

இந்த விசாரணையின் போது, கொரோனா 2-வது அலை பரவுவதற்கு காரணமே தேர்தல் ஆணையம்தான். சமூக இடைவெளியை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் மீது கொலை வழக்கு பதிவு செய்தாலும் தவறு இல்லை என்றார் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி. அவரது இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், தலைமை நீதிபதி வாய்வழியாக தெரிவித்த கருத்தை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருக்க கூடாது.. அப்படி செய்தியாக வெளியிட்டதால் தேர்தல் ஆணையத்துக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சாசன அமைப்பு. அரசியல் சாசனத்தின் படி தேர்தலை நடத்துகிற பொறுப்புமிக்க அமைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments