கொரோனா 2 - ஆம் அலையில் அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதி!!
ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும். வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அந்த கட்டுப்பாடுகள் கடந்த 10ஆம் தேதி முதல் அமலில் உள்ளன. இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு (curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதனைத்தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஊரடங்கு நேரத்தில் அவசர தேவைகளை தவிர்த்து பொது, தனியார் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், ரயில்கள் இயக்கத்துக்கு தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் கடந்த 26ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி, வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்கள், டீக்கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள், ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1 ஊரடங்கு தேவையில்லை: தமிழக அரசு அறிவிப்பு. அதேசமயம், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று உணவகங்களில் காலை 6 முதல் 10 மணி, பகல் 12 முதல் 3 மணி, மாலை 6 முதல் இரவு 9 மணி வரை மட்டும் பார்சலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஞாயிறு முழு ஊரடங்கின் போது ஹோட்டல்களுக்கு அனுமதி இல்லை என்பதால் பலரும் அவதிக்கு உள்ளான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழுஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அனஸ், V. ஹரிகிருஷ்ணன்.
Comments