'பங்கு சந்தை முதலீடு! - அதிக லாபம்!’ - ஆசை காட்டி லட்சக்கணக்கில் சுருட்டிய இளைஞர்கள் கைது!!
சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் வித்யா ஜெயந்த் குல்கர்னி மேற்பார்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார், உதவி கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் சைபர் க்ரைம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செய்யது அபுதாகிர் மற்றும் செய்யது அலி ஹூசைன் ஆகியோர் வெளிநாட்டு செல்போன் நம்பரிலிருந்து அசோக் குமாரை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றனர். அப்போது அவர்கள் ஒரு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு அதன் இயக்குநர்கள் என்றும் ஆன்லைன் மூலம் அந்நிய செலவாணி பங்கு வர்த்தகத்தை செய்து வருவதாகவும் கூறியிருக்கின்றனர். பின்னர் தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியிருக்கின்றனர்.
அதை நம்பிய அசோக்குமாரும் பல்வேறு தேதிகளில் தன்னுடைய கடன் அட்டைகள் மூலம் 10.54 லட்சம் ரூபாயை முதலீடாக செய்திருக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் லாபத்தை திரும்ப கொடுத்தவில்லை. அதோடு அசோக்குமார் கொடுத்த பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரித்தபோது கூடுதல் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார் கூறுகையில், ``சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர் (40). கடலூர் மாவட்டம் சிதம்பரம் பரங்கிப்பேட்டையச் சேர்ந்தவர் செய்யது அலி ஹூசைன் (41). இவர்கள் இருவரும் போலியான நிறுவனங்களை இணையதளங்களில் உருவாக்கியிருக்கின்றனர். பின்னர் பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பவர்களிடம் வெளிநாட்டு செல்போன் நம்பர்களைப் பயன்படுத்தி பேசியிருக்கின்றனர். அப்போது பங்கு சந்தை என்ற பெயரில் பலரை மோசடி செய்திருக்கின்றனர். அசோக்குமாரிடமிருந்து பணத்தை வங்கி மோசடி செய்திருக்கின்றனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1,95,000 ரூபாயையும் 5 செல்போன்கள், ஒரு லேப் டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். இவர்கள் இந்தியா முழுவதும் மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்கள் தொடங்கியிருக்கும் இரண்டு மோசடி நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்து ஏமாந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எனவே பங்கு வர்த்தகத்தில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்யும் போது நிறுவனத்தின் உண்மை தன்மையை தெரிந்து பணம் செலுத்த வேண்டும்" என்றனர்.நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ருக்மாங்கதன், சென்னை.
Comments