மனிதநேய மக்கள் கட்சி மாரியம்மன் கோவில் சுற்றியுள்ளபகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரை!!
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்காக கூட்டணி கட்சியினர் மாரியம்மன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரை.
கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகமெங்கும் தேர்தல் திருவிழா களைகட்டி இருக்கின்றது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு முதற்கட்ட தேர்தல் அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் முடிவடைந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் தேர்தல் நடைபெற உள்ளது.
அதற்கான பரப்புரையில் பிரதான கட்சி முதல் சிறு கட்சிகள் வரை வரிந்துகட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது கொரோனா நோய் பரவலையும் கருத்தில் கொள்ளாது ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ஆதரவாக அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் பி எஸ் குமார் மற்றும் அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் தளவாய் பாளையம் கலைச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மாரியம்மன் கோவில், களக்குடி, புலவர் நத்தம், கோவிலூர், சாலியமங்கலம் மற்றும் அருகாமையில் உள்ள சிறு சிறு கிராமங்களுக்கு சென்று நேற்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒன்றிய செயலாளர் திரு P.S .குமார் அவர்கள் கூட்டணி கட்சியிலுள்ள பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் மாற்றத்திற்கான விதையை பாபநாசம் தொகுதியில் மக்கள் விதைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்தத் தேர்தல் பரப்புரையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது ஏராளமான தொண்டர்களும் கழக நிர்வாகிகளும் இருசக்கர வாகனங்களில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மாலை சாலியமங்கலம் கடை தெருவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கழக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சியினரும் பேசினர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன்,தஞ்சாவூர்.
Comments