தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்!!
அதிலும் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். மாதத்தில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் தினமான பங்குனி உத்திரம் நாளை தெய்வங்களே தேர்வு செய்திருக்கிறார்கள் என்பது எத்தனை சிறப்புக்குரியது. இந்த பங்குனி உத்திர நாளில் முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்பட்டன.
அதிலும் குறிப்பாக கீழ்வேங்கை நாடு என்று அழைக்கப்படும் பகுதிகளில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கீழ்வேங்கை நாடு என அழைக்கப்படும் 18 ஊர்களை உள்ளடக்கிய கூட்டமைப்பில் அமைந்துள்ளது பரிதியப்பர்கோவில். மங்கள நாயகி சமேத பாஸ்கரேஸ்வரர் சுவாமிகள் சுயம்புவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
சுவாமிக்கு எதிரே சூரியன் அவரை நோக்கி வழிபாடு செய்கின்றார். இத்தளம் தஞ்சைக்கு அருகில் 22 கிலோமீட்டர் அருகாமையில் அமைந்துள்ளது இத்தலம் பாடல்பெற்ற மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.
சிறப்பான மூன்று நாட்கள்: இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு பங்குனி உத்திரம் தொடங்கி மூன்று நாட்கள் மிகவும் சிறப்பாக விழாவினை நடத்துவார்கள் .
இந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக காவல்துறை மிகவும் கட்டுப்பாடுகளை விடுத்திருந்த போதிலும் ஊர் மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு 18 கிராமங்களை சேர்ந்த காவடிகளையும் தேரையும் இழுத்து வந்து விழாவை நேற்று சிறப்பாக நடத்தினார்.
முதல் நாளான பங்குனி உத்திரம் அன்று அருகில் உள்ள கிராமங்களிலிருந்து ஊர் ஊராக பால்குடங்களையும் காவடிகளையும் சப்பரத்தையும் இழுத்து வந்தனர். இரண்டாம் நாளான நேற்று 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாலை 4 மணியில் இருந்தே ஒவ்வொரு ஊராக தங்களது ஊரின் காவடிகள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் போன்றவற்றை சுமந்து வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. அதிகாலை 4 மணி வரை இந்த விழா தொடர்ந்தது.
திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கட்டுக்கடங்காமல் இறைவனை தரிசனம் செய்து ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தனர். ஆங்காங்கே பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாப்பாடு கூடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது .
இந்த விழாவினை இந்த கொரோனா காலகட்டத்திலும் மிகவும் சிறப்பாக நடத்தித் தந்த காவல்துறையினருக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் கீழ்வேங்கை நாடு கூட்டமைப்பினர் மற்றும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன், தஞ்சாவூர்.
Comments