புகைப்படத்துடன் கூடிய பட்டா வழங்கும் திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்!! - பொதுமக்கள் கோரிக்கை
புகைப்படத்துடன் கூடிய பட்டா வழங்கும் திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், வருவாய்த்துறை மூலம் வழங்கும் பட்டாவில் புகைப்படம் இல்லாததால் பல தவறுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.
இதனால் வீடு மற்றும் இதர சொத்துக்களை விற்பனை செய்வதிலும் சிக்கல் ஏற்படும். இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க தமிழகம் முழுதும் சிறப்பு திட்டத்தை அரசு சில ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்தது. அதன்படி, தமிழகம் முழுதும் ஒவ்வொரு உள்ளாட்சிக்கும் ஒரு தாசில்தார் ஒரு சர்வேயர் தலைமையில் தனி பிரிவு அமைத்து புகைப்படத்துடன் கூடிய பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும், இந்த பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று இதற்கான படிவத்தை வழங்கினர். படிவத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் ஒப்படைத்தால் பரிசீலனை செய்து புகைப்படத்துடன் பட்டா வழங்கப்படும் என கூறினர். ஆனால், இந்த படிவத்தைப் பூர்த்தி செய்து கொண்டு செல்வோரிடம், சில ஆண்டுகளுக்கு முன் மாற்றிய புதிய சர்வே எண்ணைக் குறித்து வரும்படி அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்காக மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர். அங்கு பணியில் உள்ள சர்வேயரிடம் இதற்கான ஆவணங்கள் இருக்கும். அதை பார்த்தே புதிய சர்வே எண்ணை எழுதிக் கொள்ளலாம். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பலர் புகைப்படத்துடன் பட்டா பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 3 ஆண்டுகளாக இத்திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் 50 சதவீதம் பேர் மட்டுமே இதுவரை புகைப்படத்துடன் கூடிய பட்டா பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த திட்டத்தை பிப்ரவரி மாதம் இறுதியில் முடிக்க உள்ளனர். 50 சதவீதம் மக்கள் பயன்பெறாத நிலையில் இந்த திட்டத்தை முடிப்பதால் மக்கள் பாதிப்படைவார்கள். எனவே, இந்த திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சுரேந்தர்.
Comments