திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா! லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

 

-MMH

         சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ளது,108 திவ்யதேசங்களில் ஒன்றான, புராணச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில். மந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்குதான். உலகமக்கள் அனைவருக்கும் 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமையும் இந்த ஆலயத்திற்கு உண்டு.

இக்கோவிலில் மாசி மக விழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்தில் வலம் வந்த பெருமாளை வழிபட்டனர். இவ்விழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தினமும் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா திருக்கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது. முன்னதாக உற்சவர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் சர்வ அலங்காரத்தில் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

பின்பு மங்கல வாத்தியங்களுடன் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கற்பூர ஆராதனை காட்டப்பட்டு திருக்குளத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். பெண்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டி திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். விழாவையொட்டி சுமார் 750 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments