கண்ணியமிக்க காவல்துறையின் மீது களங்கம் ஏற்படுத்திய வாரிசுகள்! மாமூல் வசூல் செய்த காவல் உதவி ஆய்வாளர் மகன் கைது!

-MMH

      சென்னை ஐசிஎஃப் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் வசூல் செய்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐ சி எஃப், நியூ ஆவடி ரோடு பகுதியில் சில நபர்கள் பல நாட்களாக அங்கு அமைந்துள்ள கடைகளில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி வருவதாக காவல்துறையினருக்கு புகார் வந்த வண்ணமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று(பிப்.24) இரவு சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐசிஎப் காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த நபர் அண்ணாநகர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த எபினேஷ் சஞ்சய் ராஜ் (28) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவரது தந்தை விவேக் ராஜன் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

மேலும் எபினேஷ் சஞ்சய் ராஜ், அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்பவர் உட்பட ஐந்து நபர்களுடன் சேர்ந்து ஐசிஎப் நியூ ஆவடி ரோடு பகுதியில் உள்ள கடைகளில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அண்ணாநகர் காவல் நிலையத்தில் எபினேஷ் சஞ்சய் ராஜ் மீது 2014 ஆம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கஞ்சா விற்பனை செய்த, உதவி ஆய்வாளரின் மகன் உட்பட 8 மாணவர்கள் கைது! சென்னை, மதுரவாயல் புலியம்பெடு பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த உதவி ஆய்வாளர் ஒருவரின் மகன் உட்பட 8 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் புலியம்பெடு பகுதியில், வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக, அம்பத்தூர் துணை ஆணையரின் தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்திய காவல்துறையினர், அங்கு கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக மாணவர்கள் 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தஞ்சாவூர்  பாபநாசம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜெய்சூர்யா(24), சஞ்சய்(20), மதுரையை சேர்ந்த ஸ்ரீநாத்(21), சிதம்பரம் கடவாச்சேரியை சேர்ந்த ரஞ்சித்குமார்(18), வண்டலூரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் பிரசாந்த்(19),  திருவாரூரை சேர்ந்த சரத்குமார்(27), தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரி மாணவன் சேரன்(22), ஆவடி 5வது பட்டாலியனில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலதா மகனும் கல்லூரி மாணவனுமான அருண்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.

-பாரூக்.

Comments