அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு குளறுபடிகளை தவிர்க்க காளைகள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை!!!

     -MMH

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே அய்யம்பட்டியில் பிப்.7-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டின்போது குளறுபடிகளைத் தவிா்க்க காளைகளின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தாா்.

அய்யம்பட்டியில் வல்லடிகாரசுவாமி ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராமக் கமிட்டி சாா்பில் பிப்.7-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 4 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக காளைகளுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டை ஒருசிலா் மொத்தமாக வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்பதாக புகாா் எழுந்தது.

இந்நிலையில் இதுதொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரமேஷ், அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு குழு தலைவா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஆட்சியா் பேசியது: அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மொத்தம் 600 காளைகள் பங்கேற்கின்றன. நிகழ்ச்சியில், 75 நிமிடங்களுக்கு 50 போ் வீதம், 8 மணி நேரத்திற்கு மொத்தம் 300 மாடுபிடி வீரா்கள் அனுமதிக்கப்படுவா்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகளுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் உரிமையாளா் பெயா், முகவரி, காளையுடன் சோ்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஆகியவற்றுடன் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. அனுமதிச் சீட்டு பெறுபவரின் அடையாள அட்டையை சமா்பிக்கவேண்டும்.

மாவட்ட நிா்வாகம் வழங்கிய அடையாள அட்டையின் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத் துறையினா் காளைகளை மருத்துவப் பரிசோதனை செய்து தகுதிச்சான்று வழங்குவா். அடையாள அட்டை மற்றும் தகுதிச் சான்று பெற்ற காளைகளுக்கு மட்டும் ஜல்லிக்கட்டில் களமிறங்க அனுமதிக்கப்படும். 

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி முழமையாக வீடியோவில் பதிவு செய்து கண்காணிகப்படும் காளைகள் பாதுகாப்பு கருதி ஜல்லிக்கட்டு திடலை சுற்றியுள்ள பகுதிகளில் திறந்த நிலையில் உள்ள 38 பாசனக் கிணறுகள் மூடி அமைத்து  பாதுகாக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக்,தேனி.

Comments