திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பணமோசடி! நடிகர் ஆர்யா மீது இலங்கை தமிழ்ப் பெண் புகார்..!
நடிகர் ஆர்யா மீது இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் மோசடிப் புகார் அளித்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்திருப்பவர் ஆர்யா. இவர் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா படத்தில் குத்து சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஆர்யா மீது ஜெர்மனியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் பண மோசடி புகாரை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவர் விட்ஜா. இவர் ஜெர்மனியில் குடியுரிமை பெற்றுக்கொண்டு அங்குள்ள சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நடிகர் ஆர்யா மீது இவர் இந்திய உள்துறை அமைச்சகத்துக்கும், பிரதர் மோடிக்கும் ஆன்லைன் வாயிலாக பரபரப்பு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், 'ஆர்யா என்னைப் போல பண பெண்களை ஏமாற்றியிருக்கிறார் என்பது எனக்கு தெரிய வந்தது. பல பெண்களை காதலிப்பதாக்க் கூறி பணத்தையும் பெற்றுக்கொண்டு, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். என்னிடம் அவர் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதுபோல, என்னிடம் பேசியதற்கான மெசேஜ்களையும் ஸ்கிரீன் ஷாட்டுகளாக எடுத்து வைத்துள்ளேன். எனது பணத்தைக் கேட்டு பலமுறை ஆர்யாவுக்கும், அவரது தாயாருக்கும் பலமுறை போன் செய்தேன்.
அப்போது அவர்கள் என்னை ஆபாசமாக பேசியதுடன், சட்டத்தால் என்னை ஒன்றும் செய்யமுடியாது, எனக்கு அவ்வளவு செல்வாக்கு உள்ளது என்றும் கூறுகிறார்கள். இதுபோன்ற கிரிமினல்ஸ் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் புகாரின் பேரில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா அண்மையில்தான் நடிகை சாயிஷாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், அவர் மீது பெண் ஒருவர் மோசடி புகாரை அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பாரூக்.
Comments