சாப்பிட்டதுக்கு பணம் வேணும்னா, எங்க ஊருக்கு வா! பாஜகவினர் அடாவடி! ஓட்டல் நடத்தும் பெண் போலீசில் புகார்!
ஓட்டலில் ₹.5 ஆயிரத்துக்கு சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் ரகளையில் ஈடுபட்ட பாஜவினர் மீது, கடை உரிமையாளரான பெண், போலீசில் புகார் கொடுத்துள்ளார். நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தை என்ற இடத்தில் பார்வதி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அப்பகுதியிலேயே அவருக்கு 3 கிளைகள் உள்ளது இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு, சேலத்தில் பாஜ இளைஞரணி மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, தஞ்சை மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் அவ்வழியாக வந்தனர். அப்போது புதன்சந்தையில் வாகனங்களை நிறுத்தி பார்வதியின் ஓட்டலுக்கு சென்றனர். கடையில் இருந்த பலகாரங்கள், கூல் டிரிங்ஸ், டீ, காபி என ஆளாளுக்கு போட்டிபோட்டு வாங்கிச் சாப்பிட்டனர்.
மொத்தம் பில் தொகை ₹.5ஆயிரத்தை எட்டியது. ஆனால், யாரும் பணம் கொடுக்கவில்லை. அப்படியே ஆளாளுக்கு கிளம்பத்தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி பில் தொகையை கேட்டனர்.
ஆனால், பாஜவினர் பணத்தை கொடுக்காமல், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ‘‘சாப்பிட்டதுக்கு பணம் வேணும்னா, எங்க சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வாங்க’’ என கூறியபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இது குறித்து கடை உரிமையாளரான பார்வதி, நல்லிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் நடந்த பாஜ இளைஞர் அணி மாநாட்டுக்கு வந்த அக்கட்சியினர், ஒரு பெண் நடத்தும் கடையில் ₹.5 ஆயிரத்துக்கு பலகாரங்களை சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாரூக்.
Comments