வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை! கணவர்,மாமியாருக்கு சிறை..!
கிண்டி காவல் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் விருதுநகரைச் சேர்ந்த ராஜசேகரன் (53) என்பவர் புகாரளித்தார். அதில் தன்னுடைய 2-வது மகள் அனிதா (28) என்பவரை கிண்டி நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (31) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தேன். திருமணத்தின்போது வரதட்சணையாக 70 சவரன் தங்கநகைகளை கொடுத்தேன்.. அதன்பிறகும் அனிதாவிடம் கணவர் ராஜேஷ், அவரின் அம்மா ராஜம்மாள் (61) ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர்.
அதனால் அனிதா, கடந்த 12.3.2015-ல் கிண்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். எனவே என் மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், ராஜேஷ், ராஜம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அரசு வழக்கறிஞர் ஸ்ரீலேகா, ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்கள், சாட்சியங்கள் வைத்து ராஜேஷ், ராஜம்மாள் ஆகியோருக்கு தண்டனையை நீதிபதி ராஜலட்சுமி வழங்கினார். அதில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் மற்றும் தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக அனிதாவின் கணவர் ராஜேஷிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
அனிதாவின் மாமியார் ராஜம்மாளுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்ட தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து ராஜம்மாள், ராஜேஷ் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டணை வாங்கிக் கொடுத்த இன்ஸ்பெக்டர் சந்துரு, நீதிமன்ற அலுவல் பணி செய்த காவலர் சரவண விஜய்ஆனந்த் ஆகியோரை அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் பாராட்டினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ருக்மாங்கதன் சென்னை.
Comments