கிராமங்களில் குற்றம் நடவாதிருக்க யார் பொறுப்பு? விவரங்களுடன் அறிவிப்புப் பலகை!

 -MMH
     பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கு, காவல் பொறுப்பு யார்? என, போலீசார் அறிவிப்பு வைத்துள்ளனர். கிராமங்களில் குற்றச்சம்பவங்கள் நடக்கும் போது, அதை யாரிடம் புகார் செய்வது, எப்படி நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்த தெளிவின்மையும், தயக்கமும் மக்களிடம் நிலவுகிறது. இந்நிலையில், கோவை மாவட்ட போலீசார், தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், யார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என்ற விபரம், சம்பந்தப்பட்ட போலீசாரின் பெயர், புகைப்படம், மொபைல்போன் எண், போலீஸ் ஸ்டேஷன் தொடர்பு எண் ஆகியவற்றை தெளிவாக தெரிவிக்கும் வகையில், அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும் என, ஐ.ஜி., உத்தரவிட்டார்.

இதையடுத்து, பொள்ளாச்சி போலீசார் குக்கிராமங்கள் தோறும் சம்பந்தப்பட்ட விபரங்களுடன் அறிவிப்பு பலகைகள் அமைத்துள்ளனர்.

இதற்கு பொதுமக்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், யார் வேண்டுமானாலும் தங்கள் பகுதி போலீசாருக்கு புகார் அளிக்க முடியும். அதே போல், திருட்டு, கொள்ளை, பெண் வன்கொடுமை, வன்முறை, கலவரம், சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவற்றை யாருக்கு புகார் அளிப்பது, எப்படி அளிப்பது உள்ளிட்ட குழப்பங்களும் முடிவுக்கு வந்துள்ளது.கிராம பொதுமக்கள், தங்கள் பிரச்னைகள் குறித்து அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணுக்கு புகார் அளித்து, தீர்வு பெற முடியும்.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments