போராட்டக்களம் மட்டுமல்ல, மனிதநேயமும் மக்கள் மன்றத்தின் பணியே!
தமிழக மக்கள் மன்றத்தினர் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சமூகப் பிரச்சனைகளுக்காகவும் தொடர்ச்சியாக போராட்டக் களம் கண்டு வருகிறார்கள் அதேவேளையில் உறவுகளால் கைவிடப்பட்டோர் ஆதரவற்றோர் இறப்பை தழுவும்போது காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அந்த ஆதரவற்றோருக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் மனிதாபிமான சேவைகளையும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
காரைக்குடிக்கு அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆர்.எஸ்.பதி காட்டில் தற்கொலை செய்துகொண்ட ஒரு பெரியவரின் உடல் அனாதையாகக் கிடந்தது.
அவரை அடையாளம் காண காவல்துறையினர் பலவழிகளில் முயற்சி செய்தும் தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் வழக்கம்போல் மக்கள் மன்றத்தின் உதவியைக் கோரினர். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மக்கள் மன்றத்தினர் நேற்று அந்த ஆதரவற்றவரின் உடலை காரைக்குடி சந்தைப்பேட்டை இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர். இது மக்கள் மன்றத்தினரின் 124வது நல்லடக்கம் ஆகும்.
தமிழக மக்கள் மன்றத்தின் கிளைகள் மலேசியா, சிங்கப்பூர், புருணை, லண்டன் மற்றும் வளைகுடா நாடுகளிலும் இருப்பதால், கடந்த இருபது ஆண்டுகளாக அங்கு பரிதவிக்கும் தமிழ்நாட்டினரை தாயகத்திற்கு அழைத்து வருவது மட்டுமன்றி, அங்கு உயிர்நீத்த பலருக்கும் மக்கள் மன்றத்தினரே இறுதிச்சடங்கு செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆதரவற்றோர் இயற்கை எய்தினால், அவர்களின் இறுதிச்சடங்குகளையும் இவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். சிலமுறை அடுத்தடுத்த நாட்களில்கூட தொடர்ந்து இப்பணி வந்தாலும் தொய்வடையாமல் முனைப்போடு இவ்வரிய பணியினைச் செய்து வருகிறார்கள்.
"யாருமிங்கே அனாதை இல்லை, யாம் இங்கே இருக்கும்போது" என்பதே இவர்களின் தாரக மந்திரமாய், இப்புண்ணியப் பணியினைச் செய்துவருகிறார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்வி உதவிகளுக்கும், பல்வேறு மனிதநேயப் பணிகளுக்குமிடையே அநீதிகளுக்கு எதிரான தொடர் போராட்டங்களுக்கும் நடுவே இப்பணியினையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இறுதிச்சடங்கிற்கு இலவச ஆம்புலன்சு மட்டுமன்றி, இலவச உடல் குளிர் சாதனப்பெட்டியினையும் தினம்தோறும் வழங்கி வருகின்றனர்.
-பாரூக், சிவகங்கை.
Comments