இந்தியாவிலேயே பெரிய தனியார் நூலகம்!..கோவையில்.!
கோவை :இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் கோவையில் திறக்கப்பட்டுள்ளது.
கோவை ஜிவி ரெசிடென்சி பகுதியில் 'ஆமினி புத்தக நூலகம்' என்ற பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே வாசிப்புத்திறனை அதிகரிக்க செய்ய லாப நோக்கமில்லாமல் துவங்கப்பட்டுள்ள நூலகம் இந்தியாவிலேயே தனியாருக்கு சொந்தமான பெரிய நூலகமாகும். 5 ஆயிரத்து 500 சதுரடி பரப்பளவில் மூன்று மாடி கட்டிடமாக உள்ள இந்த நூலகத்தில் சுமார் 2 லட்சம் புத்தகங்கள் உள்ளன.
இதுகுறித்து நூலகத்தின் நிறுவனர் கோவிந்தராஜன் கூறியதாவது: "இங்கு நிறைய நூலகங்கள் உள்ளன. அதில் தமிழும் தமிழ் சார்ந்த புத்தகங்கள் உள்ளன. ஆனால், குழந்தைகளுக்கான புத்தகங்கள் இருப்பதில்லை. இந்த நூலகத்தில் குழந்தைகளுக்கான ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன.
இந்த நூலகத்தில் மாதம் ரூ.225 என்ற கட்டணத்தில் நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்து கொள்ள முடியும். காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை நூலகம் திறந்திருக்கும்.
5 ஆயிரத்து 500 சதுரடியில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 2 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.
கதை புத்தகங்கள், ஆராய்ச்சி, போட்டி தேர்வுகள், கட்டுரைகள் என பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தகங்களை வீடிற்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு 15 முதல் 30 நாட்களில் திருப்பி கொடுக்கலாம். விரைவில் இந்த வளாகத்திலேயே மக்கள் அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் செய்யப்படும்.
வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஓராண்டாக இளைஞர்கள் அதிகமாக வாசிப்பதை பார்க்கிறோம். இன்னும் அதிக வாசகர்களை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடனேயே இந்த நூலகத்தை லாப நோக்கம் இல்லாமல் துவங்கியுள்ளோம்." இவ்வாறு அவர் கூறினார்.
- சீனி,போத்தனூர்.
Comments