பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.! - போத்தனூர் போலீசார் அதிரடி..!!

 

-MMH

4 வயதே ஆன இந்தப் பெண் குழந்தை தனது வளர்ப்பு பெற்றோரிடம் படாதபாடுபட்டுள்ளார். உடலெல்லாம் காயங்கள், வீக்கத்துடன் குழந்தை மீட்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல்லா - நஜும் ஷா தம்பதி. இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாததால், வேறொரு தம்பதியின் 4 வயது பெண் குழந்தையை தத்தெடுத்து, இஸ்லாமியப் பெயர் மாற்றி வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நஜும் ஷா கருவுற்றதாகக் கூறப்படுகிறது. அதனால் அவருக்கு தத்தெடுத்த குழந்தை மீதான பாசம் குறைந்துள்ளது. அதனால் அந்த தம்பதி அடிக்கடி குழந்தையை அடிப்பதும் குழந்தை அலறுவதும் அக்கம்பக்கத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திவந்துள்ளது. 


பலமுறை அக்கம்பக்கத்தினர் தம்பதிக்கு அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் குழந்தை அலறவே அக்கம்பக்கத்தினர் அப்துல்லா வீட்டிற்குள் செல்போனில் கேமராவை இயக்கியபடி சென்றுள்ளனர். குழந்தைக்கு என்ன பிரச்னை என்று கேட்டபோது அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று நஜும்ஷா சமாளித்துள்ளார்.


இதையடுத்து குழந்தைக்கு உடையணிவித்து வெளியில் அழைத்து வந்து விசாரித்தபோதுதான் அவருக்கு உணவளிக்காமல் அடித்து சித்ரவதை செய்தது தெரியவந்தது. குழந்தை மெலிந்து உடல் முழுவதும் காயங்களுடனும் வீக்கத்துடனும் காணப்பட்டதைப் பார்த்து அப்பகுதியினர் வேதனை அடைந்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதியினர் உடனடியாக போத்தனூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.


போலீசார் குழந்தையை மீட்டு, வளர்ப்பு பெற்றோரைக் கைது செய்து அழைத்துச் சென்றபோது அப்பகுதி மக்கள் திரண்டு இருவரையும் அடிக்கப் பாய்ந்தனர். வார்த்தைகளால் திட்டி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். வளர்ப்பு பெற்றோரைக் கைது செய்த போலீசார் குழந்தையைக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் வளர்ப்பு தாய் - தந்தை இருவரிடமும் சனிக்கிழமை காலை முதல் போத்தனூர் போலீசாரும், குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை  மேற்கொண்டு வந்தனர். 

-பீர் முஹம்மது, குறிச்சி கோவை.

Comments