தொடரும் மழை..! - மன வேதனையில் விவசாயிகள்..!
தொடரும் மழை மன வேதனையில் விவசாயிகள். தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நிவர் புயல், புரெவி புயலால் ஏற்பட்ட மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் நின்ற ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் மழை நின்றதால் வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைத்து நெற்பயிர்களை மீட்டெடுக்க விவசாயிகள் முயன்றனர். சிலர் நனைந்த நெற்பயிர்களை அவசரமாக அறுவடை செய்து காய வைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றனர்.
மார்கழி மாதத்தில் மழை பெய்யாது என்பதால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிரை சிறப்பாக அறுவடை செய்து விடலாம் என விவசாயிகள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மழை நின்றவுடன் தண்ணீரை வடிய வைத்து நெற்பயிரை காப்பாற்றி விடலாம் என நினைத்த விவசாயிகள் தொடர் மழையால் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்த மழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டன. பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் கண்முன்னே அழுகுவதை கண்டு விவசாயிகள் கண்கலங்கியுள்ளனர்.
இது தவிர நிலக்கடலை, எள், உளுந்து உள்ளிட்ட பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வேளாண்மைத்துறையினரும், வருவாய்த்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்து அறுவடை செய்தாலும் மகசூல் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் பயிர் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடியாமல் இருப்பதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள சேதுராய நத்தம் என்ற கிராமத்தில் விவசாயிகளிடம் பேசிய பொழுது விவசாயி திரு இளையராஜா அவர்கள் கூறியதாவது "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று கூறுவார்கள். தை மாதத்தில் விவசாயிகள் நெல் மணிகளை அறுவடை செய்த பின்பு தங்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் விவசாயக் கடன்களை அடைப்பதற்கும் தை மாதம் சிறந்த மாதமாகும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் முதலீடு செய்த தொகையில் பாதி கூட கிடைக்காது என்றும் கடின உழைப்புக்கான பலன் எதுவும் இல்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார். விவசாயிகளின் வேதனை மற்றும் கண்ணீரின் அவல நிலையை நாம் கனத்த இதயத்தோடு கடந்து செல்லும் சூழ்நிலையில் தான் இருக்கின்றோம்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுமா ? இயற்கை விவசாயிகளுக்கு உதவி செய்யுமா? தமிழக அரசு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசு அதற்கு செவி சாய்க்குமா என்பதை இனிவரும் காலங்களில் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.ராஜசேகரன் தஞ்சாவூர்.
Comments