கொட்டும் மழையில் மஞ்சுவிரட்டு! சூரக்குடியில் ஆர்வமுடன் மாடுபிடி வீரர்கள்!

                                            -MMH

     சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி சிறைமீட்ட அய்யனார், படைத்தலைவி அம்மன் கோயில் பொங்கல் விழாவின் முன்னோட்டமாக மார்கழி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அன்று இளவட்ட மஞ்சுவிரட்டு நடப்பது வழக்கம். அதன்படி நேற்று  மஞ்சுவிரட்டு நடந்தது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் கிராமத்தார் சார்பில் இன்று இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இந்த இளவட்ட மஞ்சுவிரட்டு, தைத்திங்கள் திருநாளை வரவேற்கும் விதமாக நடத்தப்பட்டது.   தென் தமிழகத்திலேயே முதல் மஞ்சுவிரட்டாக இங்கு நடைபெறுவது இதன் சிறப்பாகும்.

கிராமத்தின் சார்பில் பாரம்பரிய கூட்டு வண்டியில் ஜவுளிகள் கொண்டுவரப்பட்டு காளைகளுக்கு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்டு மாடுகளும், தொழுவத்தில் இருந்து மாடுகளும் களமிறக்கப்பட்டது.

கொட்டும் மழையினால் மாடு பிடிக்கும் களம் முழுவதும் சேறும் சகதியுமாக இருந்த போதிலும் காளையர்கள் ஆர்வமுடன் எதிர்கொண்டு காளைகளை அடக்க முற்பட்டனர்.

அதில் பலருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டாலும் சகதியில் துள்ளி வரும் காளையை அடக்க இந்த மாடுபிடி வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் முற்பட்டனர்.  சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

திருச்சி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் இங்கு களம் இரக்கப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன.

- அப்துல் சலாம், திருப்பத்தூர்.

Comments