கோவையில் உருவானது SPB வனம்.!!

     -MMH

    கோவை: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவாக, கோவை 'சிறுதுளி' மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி இணைந்து, பச்சாபாளையம் ஆபீசர்ஸ் காலனி வளாகத்தில் எஸ்.பி.பி., வனம் உருவாக்கியுள்ளன. இதில் எஸ்.பி.பி., வயதை குறிப்பிடும் வகையில், 74 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நேற்று நடந்தது.

இசை கருவிகள் தயாரிக்க பயன்படுத்தும் மரங்களின் வகைகள் மற்றும் ஸ்தல விருட்ச மரக்கன்றுகள் நடப்பட்டன. எஸ்.பி.பி., வாழ்க்கை, அவரது தங்கை சைலஜா, மகன் சரண் வாழ்த்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது. 

விழாவில், நடிகர் விவேக் பேசியதாவது: ''இந்தியாவின் இசை குயில் எஸ்.பி.பி.,க்காக வனம் உருவாக்கியிருக்கிறார்கள். அதன் கீழ் அமர்ந்து, பேசிப் பாருங்கள். மனம் இலகுவாகும். கோவில் கும்பாபிஷேகத்தில்தான் கருடன் சுற்றும். மரக்கன்று நடவு விழாவில், கருடன் பறந்ததாக கூறினார்கள். 'சிறுதுளி' அமைப்பு, பச்சாபாளையம் கிராம மக்கள் அன்புக்கும், நல்ல காரியம் செய்வதற்கு கடவுள் தரும் ஆசீர்வாதமாக கருடன் சுத்திட்டு போயிருக்கு. எஸ்.பி.பி., நினைவாக, நமது நாட்டில் வேறு யாருமே யோசிக்காத, ஒரு வனம் உருவாக்குவது, உலகத்திலேயே முதல் முறை. ஒரு தலைவரை கவுரவப்படுத்த வேண்டுமெனில் சிலை வைப்போம். ஆண்டுக்கு ஒருமுறை நினைத்து, மரியாதை செய்வாம். மரம் வளர்த்தால், ஒவ்வொரு மரத்திலும், 100 காகம், 100 குயில், 100 கிளி உட்காரும். 74 மரங்களுக்கு கணக்கு போட்டு பாருங்கள்.

எஸ்.பி.பி., ஒரு குயில். இந்தியாவின் இசை குயில். அந்த குயிலுக்காக, ஒரு வனம் உருவாக்கியுள்ளனர். அர்ப்பணிப்பு உணர்வுடன், 'சிறுதுளி' மரம் நட்டு வளர்க்கிறது. தமிழகத்தில் மரம் வளர்ப்பது,மரங்களை வெட்டக்கூடாது, குளங்களை துார்வார வேண்டும் என்கிற விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. மனிதனுக்கு 95 சதவீதத்துக்கு மேல் ஆக்சிஜன் இருந்தால் தான் மூச்சுத்திணறல் இல்லாமல் இருக்கும். உயிர் வாழும் கடைசி நிமிடம் வரை ஆக்சிஜன் தருவது மரங்கள். அதன் கீழ் அமர்ந்து பாருங்கள். மனம் இலகுவாகும். இயற்கையோடு இயைந்து வாழுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.

ஊராட்சி தலைவர் சாந்தி வரவேற்றார். எம்.எல்.ஏ., சண்முகம் முன்னிலை வகித்தார். இது தெய்வீக வனம் 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசியதாவது: "தமிழக வரலாற்றில் கோவைக்கு சிறப்பிடம் உண்டு. இயற்கை சூழ்ந்த நகரம், குளம், குட்டைகள், நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க, 18 ஆண்டுகளுக்கு முன், 'சிறுதுளி' அமைப்பு துவக்கப்பட்டது. எஸ்.பி.பி., மறைவு இசைத்துறையில் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இசைக்கருவிகள் தயாரிக்க பயன்படும் மரங்களின், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இது, தெய்வீக வனம். இங்கு 'மியாவாக்கி' முறையில் குறுங்காடு, கிரிக்கெட், கூடைப்பந்து மைதானங்கள், நுாலகம், நடைபயிற்சி தளம், கழிப்பறை வசதி செய்யப்படும். இதுபோன்ற பசுஞ்சோலைகளை ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்க வேண்டும். தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தமிழக அரசு அதற்கான பணிகளை செய்ய வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

ரஜினி, கமல் ஆகிய இருவரில் யாருக்கு உங்கள் ஆதரவு' என, நடிகர் விவேக்கிடம் நிருபர்கள் கேட்டபோது, ''பொதுமக்களில் நானும் ஒருத்தன். நீங்கள் எடுப்பதைபோல், நானும் ஒரு முடிவு எடுப்பேன். கலாம் ஒரு வேலை கொடுத்திருக்கிறார். அதற்கு உதவி செய்யும் எந்த அரசியல் தலைவராக இருந்தாலும், அவர் பின்னால் செல்ல தயார்,'' என்றார்.

-சுரேந்தர்.

Comments