ஓராண்டாக இருப்பு வைத்த மக்காச்சோளத்துக்கு விலையேற்றம் இருக்குமா? அறுவடைக்கு முன்பே விலையில்லாமல் அதிர்ச்சி!!!

 

      -MMH

உடுமலை:கடந்தாண்டு அறுவடை செய்த மக்காச்சோளம் இருப்பு வைத்தும், விலையேற்றம் இல்லாததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடை துவங்க உள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. 

ஆண்டு தோறும், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இரு ஆண்டுக்கு முன், குவிண்டால், 2,800 ரூபாய் வரை விற்றது. கடந்தாண்டு, ஜன.,துவக்கத்தில், குவிண்டால், 2,200 ரூபாய் வரை விற்று வந்தது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஒழுங்கு முறை விற்பனை கூடம், சொந்த குடோன்களில் இருப்பு வைத்தனர். ஆனால், எதிர்பார்த்த விலை உயர்வு கிடைக்கவில்லை.

ஓராண்டு வரை இருப்பு வைத்த நிலையில், கடந்த சில நாட்களாக மேலும் விலை குறைந்து, 1,550 முதல் 1,650 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது. இருப்பு வைத்தும் பயனில்லாததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.தொடர் சரிவால் கவலைஉடுமலை பகுதிகளில், தாமதமாக பெய்த பருவ மழை மற்றும் உரிய விலை கிடைக்காதது ஆகிய காரணங்களினால், மக்காச்சோளம் சாகுபடி பரப்பு பாதியாக குறைந்துள்ளது. பி.ஏ.பி.,பாசனம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு, இரு வாரத்தில் அறுவடை துவங்கும் நிலை உள்ளது. தற்போதைய விலை குறைவால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது:கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்வதோடு, 'சிண்டிகேட்' அமைத்து விலையை குறைப்பதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை, வோளாண் விற்பனை, வணிக துறை, ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, கோழித்தீவன நிறுவனங்களிடம் ஒப்பந்தமிட்டு, ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் விற்பனை செய்யவும், அரசு நேரடியாக கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்காச்சோளம் வியாபாரிகள் கூறுகையில், 'கறிக்கோழி பண்ணைகளில் உற்பத்தி குறைக்கப்பட்டதால், மக்காச்சோளம் கொள்முதல் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்திலிருந்து, தினமும், 1,500 டன் மக்காச்சோளம் வரத்து உள்ளது. குவிண்டால், 1,480 வரை வாங்கப்படுகிறது. உள்ளூர் மக்காச்சோளத்தில், புரதம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் உள்ளதால், உள்ளூர் கொள்முதல் அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. அதனால், மேலும் விலை குறையவாய்ப்பில்லை,' என்றனர்.ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் கூறுகையில், 'இருப்பு வைத்த மக்காச்சோளத்திற்கு விலை இல்லாமல், தொடர்ந்து சரிவை சந்தித்து வருதிறது. 

தற்போது, சாகுபடி பரப்பு பாதியாக குறைந்துள்ளதால், அறுவடை செய்யப்படும் மக்காச்சோளத்திற்கு விலை குறையாது; வரத்து குறைவால் விலை உயரும் வாய்ப்புள்ளது,' என்றனர்.மாற்று பயன்பாடுமக்காச்சோளத்தில், இருந்து பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து பழநி வாகரையிலுள்ள, மக்காச்சோள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் வாயிலாக, ஆய்வுகள் நடத்த வேண்டும். இதனால், மக்காச்சோளத்துக்கான தேவை அதிகரித்து, பிரதான பயிராக உள்ள மக்காச்சோளத்துக்கு விலை சரிவு தடுக்கப்படும்; சாகுபடி பரப்பும் குறையாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

-நாளையவரலாறு செய்திக்காக, 

-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.

Comments