திறக்காமல் வீணாகும் லிப்ட் நடை மேம்பாலம்!! - ஆக்கிரமிப்பால் மாயமாகும் அவலம்!!!

     -MMH

உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டப்பட்ட நடை மேம்பாலம், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால், ஆக்கிரமிப்புகளாலும், பழைய பொருட்கள் குடோனாகவும் மாறியுள்ளது. உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், கோர்ட், தனியார் மருத்துவமனைகள், பிரதான கடை வீதிகளான, கல்பனா ரோடு, சீனிவாசா வீதி உள்ளிட்ட ரோடுகளுக்கு செல்லவும், வணிக வளாகங்கள், செல்லவும், பொதுமக்கள் பஸ் ஸ்டாண்டிலிருந்து, திண்டுக்கல்- பழநி தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது.இந்த ரோட்டில், நுாற்றுக்கணக்கான மக்கள் ரோட்டை கடக்கும் நிலையில், தொடர் வாகன போக்குவரத்து காரணமாக, ரோட்டை கடப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதோடு, விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. 

இதற்கு தீர்வு காணும் வகையில், பஸ் ஸ்டாண்ட் அருகே, பழநி- - பொள்ளாச்சி ரோட்டின் குறுக்கே, 1.5 கோடி ரூபாய் செலவில், 'லிப்ட்' உடன் கூடிய நடை மேம்பாலம் கட்டப்பட்டது.ஆனால், பணி முடிந்து, ஆறு மாதத்திற்கும் மேலாகியும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் வீணாகி வருகிறது. நடை மேம்பாலத்தின் நுழைவாயில், அருகிலுள்ள கடை உரிமையாளர்கள், தள்ளுவண்டி கடைகளால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 'லிப்ட்' மற்றும் படிகளை, கடைக்காரர்கள் பழைய பொருட்களை வைக்கும் குடோனாக மாற்றியுள்ளதோடு, மது, கஞ்சா உள்ளிட்ட போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறியுள்ளது.

நடை மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள், பொருட்கள் ஆகியவை ஒவ்வொன்றாக திருடப்பட்டும் வருகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக, 1.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டும், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, வீணாகி வருகிறது.ரோட்டை கடக்கும் மக்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும், போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்து வருகிறது. எனவே, பஸ் ஸ்டாண்ட் நடை பாதை, நடை மேம்பாலம் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடை மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாளையவரலாறு செய்திக்காக,

-முஹம்மதுஹனீப்,திருப்பூர்.

Comments