ஆண்டிபட்டியில் அவரைச் செடியில் புழு தாக்குதல் அதிகரிப்பு!! விவசாயிகள் வேதனை!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் பயிரிடப்பட்டுள்ள அவரைச் செடிகளில் அதிகரித்துள்ள புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.
ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் அவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது, குறுகிய காலத்தில் விளைச்சல் தருவதால், பெரும்பாலான விவசாயிகள் அவரை பயிரை சாகுபடி செய்துவருகின்றனா். அதிலும், கடந்த சில மாதங்களாக தேனி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், அவரை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஆனால், தற்போது அவரைச் செடிகளில் புழு தாக்குதல் அதிகரித்து காணப்படுவதால், அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். தற்போது, நன்கு வளா்ந்துள்ள செடிகளில் பூக்கள் மற்றும் காய்கள் அதிகளவில் காய்த்துள்ளன. ஆனால், 50 சதவீத காய்களில் புழு தாக்குதல் உள்ளதால், காய்கள் கருப்பு நிறமாகவும், மஞ்சள் நிறமாகவும் மாறியுள்ளன.
புழுக்களை ஒழிக்க விவசாயிகள் மருந்துகள் மற்றும் உரங்கள் இட்டும் எந்த பயனும் கிடைக்கவில்லை. இதனால், விளையும் அவரை காய்களில் பாதியை கீழே கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். சந்தையில் அவரைக்காய் கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், புழு தாக்குதலால் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
இந்த புழு தாக்குதல் குறித்து விவசாயிகள் வேளாண்மைத் துறையினரிடம் புகாா் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அவரை பயிரிட்டு நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆசிக்,தேனி.
Comments