தமிழகத்தையே அதிரவைத்த அம்மாசை கொலை வழக்கில்....இரட்டை ஆயுள் தண்டனை!!

   -MMH

     இரட்டை ஆயுள் தண்டனை... தமிழகத்தையே அதிரவைத்த அம்மாசை என்ற பெண் கொலை செய்யப்பட்ட  கொலை வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல், அவரது மனைவி மோகனாவுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த அம்மாசை என்ற பெண் கடந்த 2011ம் ஆண்டு மாயமானார் . இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அம்மாசையை, வழக்கறிஞர் ராஜவேல், அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் ராஜவேலின் மனைவி மோகனா, ஒடிசாவில் நிதி நிறுவனம் நடத்தி 12 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததால் அவர் மீது 5 வழக்குகள் இருந்தது தெரியவந்தது.

அந்த வழக்குகளில் இருந்து மனைவியைக் காப்பாற்ற திட்டமிட்டார் ராஜவேல். அதற்காக தன்னிடம் சொத்து வழக்கிற்காக வந்த அம்மாசை என்ற பெண்ணை உதவியாளர் பொன்ராஜ், பழனிச்சாமி ஆகியோர் உதவியுடன் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அம்மாசையின் உடலைக் காட்டி மனைவி இறந்து விட்டதாக மாநகராட்சியின் இறப்பு சான்றிதழைப் பெற்றார். ஊரறிய இறுதிச் சடங்குகளையும் நிறைவேற்றினார்.

அதன்பின் இறப்பு சான்றிதழை ஒடிசாவில் காட்டி மனைவி மீதான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜவேல், அவரது மனைவி மோகனா, உதவியாளர் பழனிச்சாமி ஆகியோர் 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

வழக்கு கோவை 5 வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் ஈ.டி.ராஜேவேல், அவரது மனைவி மோகனா, உதவியாளர் பழனிச்சாமி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார் நீதிபதி முகமது பாரூக். தொடர்ந்து தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ராஜவேல் - மோகனா தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பழனிச்சாமிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

வழக்கில் 4வது குற்றவாளியான பொன்ராஜ், அப்ரூவராக மாறி பிறழ்சாட்சியாக மாறிய நிலையில் அது தனி வழக்காக நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட அம்மாசையின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 1.20 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளிகள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

-சுரேந்தர்.

Comments