தெரிந்து கொள்வோம்! வைரஸ் என்றால் என்ன?ஆச்சரியமூட்டும் உண்மைகள்..!!
வைரஸ் பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்..!! வைரஸ் என்ற சொல்லை கேட்ட உடனேயே நமக்கு அவை நம் உடலில் உண்டாக்கும் பாதிப்புகள் தான் நினைவிற்கு வரும். (சிலருக்கு கணினி ஞாபகம் கூட வரலாம்) காரணம், அவை பெரும்பாலும் மனித உடலுக்கு கெடுதல்களையே தருகின்றன. சாதாரண சளி முதல் சார்ஸ் போன்ற கொடிய நோய் வரை வைரஸ்கள் தான் காரணம். ஆனால் உண்மையில் நமக்கு நன்மை தரும் வைரஸ்களும் நாம் வாழும் இதே உலகத்தில் மட்டும் அல்ல நம் உடலிலும் வாழ்கின்றன என்பது பலருக்கு தெரியாது. இன்னும் சொல்ல போனால் ஒரு சில வைரஸ்கள் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து நம்மை நோய்களில் இருந்து காக்கும் பணியை செய்கின்றன!!!
வைரஸ் என்றால் என்ன: பொதுவாக வைரஸ்கள் ஒரு உயிரினத்தை தாக்கும் போது, அந்த உயிரினத்தின் செல்களை தாக்கி அவற்றில் புது வைரஸ் துகள்களை அனுப்பி தானும் வளர்ந்து நோயையும் கூடவே வளர்கின்றன.ஆனால் நல்ல வைரஸ்கள் உடலுக்கு எந்த தீங்கும் தராமல் தீமை தரும் பிற நுண்ணுயிரிகளை மட்டும் அழிகின்றன. ஏற்கனவே பாக்டீரியாக்களில், சில நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன என்றும் சில வகை பாக்டீரியாக்கள் உள்ளவர்களுக்கு ப்ளூ வைரஸ் தாக்குதல் ஏற்படாதும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி தான் வைரஸ்களிலும் நன்மை மட்டும் செய்யும் வகைகளும் உள்ளன.
நோய்களை தடுக்கும்: Bacteriophages அல்லது phages எனப்படும் இந்த வைரஸ்கள் நமது உடலுக்கு நோயை தரும் பாக்டீரியாவை தாக்கி அழிக்கும். இப்படிப்பட்ட வைரஸ்கள் நமது செரிமான, சுவாச மற்றும் இனப்பெருக்க பாதைகளில் உள்ள Mucus போன்ற திரவங்களில் காணப்படுவதாக பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. பொதுவாக இந்த Mucus அடர்த்தியான திரவமாக உறுப்புகளின் உள் சுவரில் படிந்து உறுப்பை காக்கும். இதனால் நுண்ணுயிரிகள் இவற்றை தாண்டி உறுப்பின் செல்களை அழிப்பது கடினம். இந்த வைரஸ்கள் வயிற்று போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. இது போன்ற இயற்கையான நோய் தடுப்பு வைரஸ்கள் நமது தோலிலும் ஏன் ரத்தத்தில் கூட இருக்கின்றன!
அதே போல சில வைரஸ்கள் குறிப்பிட்ட சில தீங்கு தரும் வைரஸ்களிடம் இருந்தும் நம்மை காக்கின்றன. இப்படிப்பட்ட நல்ல வைரஸ்கள் புற்றுநோய் செல்களை அதாவது சில வகை வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அழிகின்றன. ஏனெனில் இந்த நல்ல வைரஸ்கள் உயிர் வாழ மனித உடல் அவசியம் என்பதால் அந்த உடலுக்கு தீங்கு தரும் வைரஸ்களை அழிக்கின்றன.
எடுத்துக்காட்டாக Pegivirus C அல்லது GBV-C என்னும் வைரல் தாக்கிய ஒரு HIV நோயாளி இந்த வைரஸ் தாக்கப்படாத HIV நோயாளியை விட அதிக ஆண்டு காலம் வாழ்வதாக பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.இந்த வைரஸ், நோய் வைரஸ் மற்ற செல்களுக்குள் நுழையாத படி தடுக்கும். மேலும் ரத்த வெள்ளை அணுக்கள் உருவாக்கும் ஒரு வகை நோய் எதிர்ப்பு புரோடீன் சுரப்பை தூண்டி நோய் மேலும் வளர்வதை தடுக்கிறது.
சேகரிக்கும் விதம்: முன்பெல்லாம் நோய் தடுப்பு சிகிச்சைக்காக இவை தேவைப்படும் என்பதால், இவற்றை சாதாரண நீர்நிலைகள் மற்றும் காற்றில் இருந்தும் ஏன் கழிவுநீரில் இருந்தும் கூட சேகரிப்பார்கள். சில சமயங்களில் தேவை அதிகமாகும் போது நோயாளிகளின் உடல் திரவங்களில் இருந்து கூட பிரித்தெடுப்பார்கள். அதன் பிறகு குறிப்பிட்ட வைரஸை தனிமைப்படுத்தி, தூய்மை படுத்தி,
சிகிச்சைக்கு பயன்படுத்துவார்கள். அதிலும் நோய் எதிர்ப்பு மருந்துகள் இப்போது அதிகள் உபயோகிக்க படுவதால் இவற்றின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இன்றைய நவீன யுகத்தில் இந்த வகை நல்ல வைரஸ்களை மரபணு முறையில் வடிவமைப்பு செய்கிறார்கள். இப்படி உருவாக்கிய வைரஸ்களை ஆய்வு கூடங்களில் குறிப்பிட்ட பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறதா என சோதனை செய்து விட்டு பின்பு சிகிச்சைக்கு பயன்படுத்துகிறார்கள்.
வைரஸ் தொற்றின் அவசியம்: மனித உடலில், பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணுயிர்கள் மனித செல்களை விட சுமார் 10 மடங்கு அதிகமாக உள்ளனவாம்!. இது போன்ற அளவுகள் கேட்க அதிகமாக இருந்தாலும், இது இயற்கையானது தான் என்றும் சிறு வயதில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவது கண்டிப்பாக அவசியம் என்றும் அறிவுறுத்துகிறார்கள் சில விஞ்ஞானிகள். ஏனெனில் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கும் அவை செயல்படவும் காய்ச்சல், சளி போன்ற கேடு விளைவிக்காத நோய்கள் அவசியம்.
அப்போது தான் நோய் எதிர்ப்பு மணடலம் சரிவர வேலை செய்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இதனால் தான் அன்றைய காலத்தில் மழை, குளிர், வெயில் என எதையும் பொருட்படுத்தாது விளையாடிய போதும் அந்த குழந்தைகளுக்கு பெரிதாக எந்த நோயும் தாக்க வில்லை.ஆனால் இன்றைய காலத்தில் பல இடங்களில் குழந்தைகளை வீட்டிற்கு உள்ளயே வளர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், தேவையான அளவில் நுண்ணுயிரிகளின் தாக்கத்திற்கு பழக்கப்படாமல் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. மொத்தத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்வு மட்டுமே நம்மை எப்போதும் காப்பாற்றும் என்பது மட்டும் தெளிவாகிறது.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments