'உங்க வீட்ல துப்பாக்கி இருக்கறதா புகார் வந்திருக்கு!' - தொழிலதிபரை அதிரவைத்த கொள்ளையாளர்!!
சென்னை அசோக்நகரில் குடியிருக்கும் தொழிலதிபர் வீட்டுக்குள் போலீஸ் எனக் கூறி நுழைந்த கும்பல், நகை, பணம், கார் ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறது.
சென்னை அசோக்நகர், 79-வது தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (49). தொழிலதிபர். இவரின் வீட்டுக்குக் கடந்த 9.12.2020-ம் தேதி பிற்பகலில் எட்டுப் பேர் காரில் வந்தனர். தங்களை போலீஸ் என வீட்டில் இருந்தவர்களிடம் அவர்கள் அறிமுகப்படுத்திக்கொண்டனர். பின்னர் `வீட்டில் துப்பாக்கி இருப்பதாக எங்களுக்குப் புகார் வந்திருக்கிறது. அதனால் வீட்டில் சோதனை நடத்த வேண்டும்’ என போலீஸ் கெட்டப்பில் வந்த அவர்கள் கூறினர்.பின்னர் பாண்டியன் மற்றும் அவரின் குடும்பத்தினரை அந்த நபர்கள், ஓர் அறையில் பூட்டிவைத்தனர்.
அதன் பிறகு வீட்டிலிருந்து 43 சவரன் தங்க நகைகள், 12 லட்சம் ரூபாய், மூன்று செல்போன்கள், ஒரு கார் ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டு அந்த நபர்கள் தப்பிச் சென்றனர். பூட்டிய அறைக்குள் சிக்கிய பாண்டியனும் அவரின் குடும்பத்தினரும் நீண்ட நேரத்துக்குப் பிறகு வெளியில் வந்தனர். அப்போதுதான் வீட்டில் தங்க நகைகள், பணம் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது.இதையடுத்து பாண்டியன், கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் (தெற்கு) தினகரன், இணை கமிஷனர் சுதாகர் ஆகியோரின் ஆலோசனை பேரில் அசோக் நகர் உதவி கமிஷனர் பிராங்க்டி ரூபன் மேற்பார்வையில் கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
-பாலாஜி தங்க மாரியப்பன்,சென்னை போரூர்.
Comments