மிகக்குறைந்த விலையில் நடமாடும் உணவு..!! அசத்தும் அன்னூர் மக்கள்!!
ஒரு பருக்கை சோறு யானைக்கு வேண்டுமானாலும் சிறிதாக இருக்கலாம் ஆனால்... எறும்புக்கு...!உணவு. இதற்காகத்தான் இத்தனை ஓட்டம். சிலர், தங்கள் உடலை குறைக்க, உணவுக் கட்டுப்பாடு இருப்பர். மறுபக்கம் சிலரோ, ஒரு வேளை உணவுக்காகவே தவம் கிடப்பர். கொரோனா காலகட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், உணவுக்கே அவதிப்பட்டவர்கள் உண்டு.
ஈர உள்ளங்கள் பலர், தங்களால் இயன்ற வகையில், உணவு கிடைக்காமல் அவதிப்பட்டவர்கள் பலருக்கு பசியாற்றினர். அந்த வகையில் அவர்களுக்கெல்லாம் நன்றி. பசி என்பது, ஒரு பொதுவான மொழியாகத்தான் பார்க்கப்படுகிறது. ஒருவருடைய பசியின் மொழியை, மற்றொருவர், தான் உணரும் வரை அறிந்து கொள்ள முடியாது.
சொல்லப் போனால், பசி வந்தால், எல்லாம் மறந்து போகும். காரணம் இல்லாமல் கோபம் வரும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற சொல்வழக்கில், எவ்வளவு உண்மை இருக்கிறது என்று அப்போது புரியும். இன்னமும் பலர், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். சிலர், குறைந்த விலையில் உணவு வழங்கி வருவது, போற்றுதலுக்குரியது.
பல உணவு விடுதிகளில், உணவை வீணாக்காதீர்கள் என்று அறிவுறுத்துவதும் தொடர்கிறது. இந்நிலையில், அன்னுார் அருகே மூக்கனுாரில், சமூக ஆர்வலர்கள் சிலர் இணைந்து, ஏழை, எளிய மக்களுக்காக, குறைந்த விலையில் மதிய உணவு வழங்கும், நடமாடும் வள்ளலார் உணவகத்தை கடந்த மாதம் துவக்கினர்.
இந்த உணவகத்துக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவர்கள் சார்பில், இரு சக்கர வாகனத்தில், மதிய உணவு பாக்கெட்டுகளை எடுத்து கொண்டு, அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், தினமும் மதியம் பத்து ரூபாய்க்கு, மதிய உணவு பாக்கெட் விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் கூறுகையில்:, எலுமிச்சை, புளி சாதம், தக்காளி சாதம், காய்கறி சாதம் என, தினம் ஒரு வகை செய்கிறோம். கூலி தொழிலாளர்கள், அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெறுபவர்களுடன் தங்கியிருப்போர் மற்றும் சொந்த வீடு இல்லாமல், பஸ் ஸ்டாண்டு மற்றும் சந்தை வளாகத்தில் வசிப்பவர்கள் வந்து, இந்த உணவை வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு பாக்கெட் மதிய உணவு தயாரிக்க, 20 ரூபாய்க்கு மேல் செலவு ஆகிறது. இருப்பினும், ஏழை, எளிய மக்களுக்காக, பத்து ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. எங்களது சேவையில் பங்கேற்று கை கொடுத்தால் இன்னும் பலருக்கு, குறைந்த விலையில் உணவு வழங்க முடியும் என்றார்.
-சுரேந்தர் கவுண்டம்பாளையம்.
Comments