'ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு’ திட்டம் 9 மாநிலங்களில் வெற்றிகரமாக அமல்!!

 

     -MMH

     9 மாநிலங்களில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு’ திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு 2020-2021-ம் ஆண்டுக்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 2 சதவீதம் அளவுக்கு கூடுதலாக கடன் வாங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கூடுதல் கடனில் ஒரு பகுதி, சேவைத்துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி அடையாளப் படுத்தப்பட்ட ஒரு துறை பொது வினியோகத்துறை ஆகும். இந்த துறைக்கு, கூடுதல் கடன் சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் இதுவரை ஆந்திரா, அரியானா, கோவா, கர்நாடகம், கேரளா, தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 9 மாநிலங்கள் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளன. இதற்காக இந்த மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.25,523 கோடி அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தகவல்களை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அந்த துறையின் மந்திரி நிர்மலா சீதாராமனும் டுவிட்டரில் இதை பதிவிட்டுள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments