அதிதீவிர கரோனா பாதித்த 20 பேர்களில் சென்னை நபரும் ஒருவர்!! - 531 பேர் மாயம்!!
சென்னை: முதன்முதலில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அதிதீவிர கரோனா தொற்று, தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. அதிதீவிர கரோனா பாதித்த 20 பேர்களில் சென்னை நபரும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.
பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய 531 பயணிகளை சுகாதாரத் துறையினர் தேடி வருகிறார்கள்.
கரோனா வைரஸின் பி.1.1.7 என்று தற்போது அறியப்படும் அதிதீவிர கரோனா வைரஸ், பிரிட்டனில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இது பழைய கரோனா வைரஸைக் காட்டிலும் அதிவேகமாகப் பரவும் என்று அறிவிக்கப்பட்டது.
நேற்று வரை இந்தியாவில் 6 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சென்னை நபர் என்றும், அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் தனியறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிதீவிர கரோனா பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அதிதீவிர கரோனா பாதித்த இந்தியர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 20 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக மேலும் 16 பேருக்கு அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பி, கரோனா உறுதி செய்யப்பட்ட அனைவரது மாதிரிகளும் புணேவிலுள்ள வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை பிரிட்டனிலிருந்து திரும்பிய 1,549 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களது உடல்நிலையை சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இவர்களில் 1,432 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய 531 பயணிகள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவரவில்லை. இவர்களில் பெரும்பாலான பயணிகள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தமிழகத்துக்குள் நுழைவதற்க 96 மணி நேரத்துக்கு முன்பு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டனர். இங்கு வந்ததும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
பாலாஜி தங்கமாரியப்பன்,சென்னை போரூர்.
Comments