12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு! - காந்திய மக்கள் இயக்க தலைவர் போக்சோ சட்டத்தில் கைது!

-MMH

     காந்திய மக்கள் இயக்கத தலைவர் போக்சோ சட்டத்தில் கைது! குண்டர் சட்டமும் பாய்ந்தது! பவானி பெருமாள் மலை அருகே உள்ள ஆர்.என்.புதூர் மாதேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 39). ஈரோடு மாவட்ட காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான இவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 27-8-2020 அன்று இவருடைய ஜெராக்ஸ் கடைக்கு வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெரியசாமியை தேடி வந்தார்.

இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் 5-ந் தேதி ஈரோடு மகிளா கோர்ட்டில் பெரியசாமி சரண் அடைந்தார். அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி, நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்ததும் கோவை மத்திய சிறையில் பெரியசாமி அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பெரியசாமியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுக்கு பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் பெரியசாமியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு கோவை மத்திய சிறை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 21 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

மேலும் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பவானி பகுதியை சேர்ந்த துளசி மாது, சதீஷ்குமார், செல்வராஜ் ஆகிய 3 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ததற்காக பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினிக்கு பவானி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments