இணையத்தில் கொலை மிரட்டல்கள்: வெதர்மேன் பிரதீப் ஜான் வேதனை!!

 

   -MMH

     வானிலை அறிக்கையை தன்னிச்சையாக வெளியிட்டு இணையத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அந்த மிரட்டலில், 'வானிலை நிலவரம் சொல்லும் அளவுக்கு அவருக்குத் தகுதியில்லை. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவர் வானிலை ஆய்வு மையத்தின் மீது அவதூறு பரப்புகிறார். எனவே அவரை அடித்துக் கொல்ல வேண்டும்' என்பது போன்ற கருத்துகளை சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் மத ரீதியாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கான ஸ்க்ரீன் ஷாட்டுகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பிரதீப் ஜான், 'நான் எனது பணியை விரும்பிச் செய்து வருகிறேன். நான் வானிலை ஆய்வு மையத்தை குறிப்பிட்டு எதையும் பேசவில்லை. நான் அதற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறேன். எனது பதிவு பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து நகர்ந்து விடுங்கள். நான் ஒரு சாதாரண ஆள். சிலரின் அவதூறு, அநாகரிகமான பேச்சுக்கள் என் இதயத்தை நொறுக்குகிறது. சில கமெண்ட்டுகளில் என்னை கொலை செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்' என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுக்கு ஆதரவாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். குறிப்பாக விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு வெதர்மேன்’ திரு. ப்ரதீப் ஜானை மதரீதியில் அவதூறு செய்வதும், அவரைக் கொலைசெய்யவேண்டும் எனப் பதிவிட்டு வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் ஏற்புடையதல்ல. இதைத் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- சிவகங்கை பாரூக்.

Comments