நாங்க பாராட்டினாப் போதுமா? நீங்களும்.....!

   -MMH

    தச்சநல்லூர் இரயில்வே மேம்பாலத்தின் மீது இங்குமங்குமாக வாகனங்கள்  வேகமாகப் போய்க்  கொண்டு இருக்கின்றன. இடது புற மேம்பாலக்  கைப்பிடிச்சுவர் ஓரமாக அந்த மனிதர் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தார். நெருங்கிச் சென்று  பார்த்து திகைத்தோம். ஆம்! கையில் ஒரு பிரஷ் வைத்துக் கொண்டு மழை நீர் வடியும் சல்லடைக் குழியில்  அடைத்திருந்த மணலை  அகற்றிக் கொண்டு இருந்தார் அம்மனிதர். கொட்டும் மழைநீர் பாலத்தில் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு சிரமம் தராதிருக்கும் பொருட்டு அவர் செய்யும் இப்பணி உண்மையில் நெகிழ்ச்சி கலந்து வியப்பூட்டியது. அவசரகதியில் பறக்கும் நமக்கு அந்தப் பாலத்தோர சல்லடைக்குழியை கவனிக்கக்கூட நேரமிருக்காது. நீர் தேங்கினால் "நல்லாக் கட்டினான் போ..!" என்று அரசாங்கத்தைக் குறை சொல்ல மட்டுமே தெரிந்த நம்மிடையே அம்மனிதரின் செயல் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி கலெக்டரேட்டில் டெலிபோன் கிளார்க்காகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. கந்தசாமியின் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சமுதாய அக்கறையுடன் கூடிய இப்பணியும், அவரது  புன்னகை ததும்பும் முகமும், "நமக்கு நாமே தானே செய்யணும்" என்ற அடக்கமான பதிலும்  அவரைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது.

அரசு வேலைபார்த்து ஓய்வு பெற்ற பின்னும் "நாடென்ன செய்தது நமக்கு" என்று வெட்டி ஜம்பம் பேசாமல் "நாமென்ன செய்தோம் அதற்கு?" என்று இயன்றதை எதிர்பார்ப்பின்றிச் செய்யும்  இம்மாமனிதரை நாங்கள் மட்டும்  பாராட்டினால் போதுமா? 

உங்கள் பாராட்டை, இச்செய்தியைப் பலருக்கும் பகிர்வதன் மூலம் தெரிவியுங்களேன் வாசகர்களே!

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.

Comments