அதிதீவிர புயலாக மாறிய நிவர் புயல்!! - வானிலை மையம் தகவல்!!

 

      -MMH

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது நிவர் புயலின் வேகம் மணிக்கு 7 கி.மீட்டரில் இருந்து 11 கி.மீட்டராக அதிகரித்து, வட மேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூரில் இருந்து 240 கி.மீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 250 கி.மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவிலும் நிவர் புயலானது மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலின் சுழல் வேகம் மணிக்கு 105 கி.மீட்டர் முதல் 115 கி.மீட்டர் வரை உள்ளதாகவும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 155 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கனமழை தொடரும் என்றும் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களிலும் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர் புதுச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments