தவறிழைத்த வாலிபர்களுக்கு பாடம்! காரணம்பேட்டை மக்கள் கறார்!!!
பல்லடம்;பஸ் ஸ்டாண்டுக்குள், மது அருந்திய இளைஞர்களுக்கு, காரணம்பேட்டை பொதுமக்கள், பாடம் புகட்ட வைத்தனர்.பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரணம்பேட்டை பஸ் ஸ்டாண்ட் பயனின்றி இருந்தது. ஊராட்சி நிர்வாகத்தின் முயற்சியால், கடந்த மார்ச் மாதம் முதல், இந்த இடம் காய்கறி சந்தையாக இயங்கி வருகிறது. காலியாக உள்ள பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தி, இரவு நேரத்தில், இளைஞர்கள் சிலர், மது அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.இரு நாட்களுக்கு முன், பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் அமர்ந்து, இளைஞர்கள் சிலர் மது அருந்தினர். அப்பகுதி மக்கள் அவர்களை கண்டித்ததால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், பொதுமக்கள், பல்லடம் போலீசாரிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரித்தனர். 'இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதை தவிர்க்க, இரவு ரோந்து மேற்கொள்ளப்படும்' என, போலீசார் தெரிவித்தனர்.சமாதானமடையாத மக்கள், 'பஸ் ஸ்டாண்டுக்குள் மது அருந்திய இளைஞர்களுக்கு, தண்டனை விதிக்க வேண்டும்' என்றனர். இதையடுத்து, 'மது அருந்த தடை செய்யப்பட்ட பகுதி; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற வாசகம் தாங்கிய, 25 அறிவிப்பு பலகையை தயாரித்து, ஆங்காங்கே வைக்கும் செலவு, பொறுப்பு அந்த இளைஞர்களிடமே வழங்கப்பட்டது. தவறிழைந்த இளைஞர்களுக்கு பாடம் புகட்டும் வகையிலான இச்செயல், காரணம்பேட்டை பகுதி மக்களிடையே வரவேற்பு ஏற்படுத்தியது
நாளையவரலாறு செய்திக்காக,
-ஹ.மு.முஹம்மது ஹனீப் திருப்பூர்.
Comments