அச்சுறுத்தும் மின்கம்பம் விரைவில் மாற்றியமைப்பு! வாட்ஸ் ஆப்பிலும் புகார் செய்ய அழைப்பு!!

 

-MMH

திருப்பூர்;நகரில், பழுதடைந்த, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றியமைக்க, மின்வாரியத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.திருப்பூரில் பிரதான ரோடுகள், முக்கிய வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், பல ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மின்கம்பங்கள், பழுதடைந்த நிலையில் உள்ளன.

குறிப்பாக ராயபுரம், பலவஞ்சிபாளையம், எஸ்.வி., காலனி, குமரானந்தபுரம், கொங்கு மெயின்ரோடு, தென்னம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மின்கம்பங்களின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து, பலவீனமான நிலையில் இருப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். பலத்த காற்றுக்கு, அவை சாயும் சூழல் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.இது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதுடன், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் மீது ஏறி, பழுதுநீக்க பணி செய்ய, மின்வாரிய ஊழியர்கள் அஞ்சினர். நேற்று முன்தினம் பெய்த கனமழையில், பலவஞ்சிபாளையத்தில் இரு மின்கம்பம் சேதமடைந்தது.

அவற்றை அப்புறப்படுத்தி, மாற்றியமைக்கும் பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜவகர் கூறுகையில், ''மழையால், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள், பழுதடைந்த, தாழ்வாக உள்ள மின்கம்பங்களை போட்டோ எடுத்து, சரியான இடத்தையும் குறிப்பிட்டு, 9442111912 என்ற எண்ணிற்கு வாட்ஸ ஆப் மூலம் அனுப்பி வைத்தால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-ஹ.மு.முஹம்மது ஹனீப் திருப்பூர்.

Comments