ஊழல் அதிகாரிகளின் மொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஆவேசம்..!!

 

   -MMH

மதுரை: நவ - 30.

     ஊழல் அதிகாரிகளின் மொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்: மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஆவேசம்..!!  

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள், தங்களது பணியை முறையாகச் செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர், 

அரசு சார்பில் தமக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா இடத்திலிருந்து தன்னை வெளியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கையை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசுத்தரப்பில் ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர், தாங்கள் அரசு ஊழியர் என்பதை மறைத்து இலவச வீட்டுமனை பட்டாவை பெற்றிருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், அரசு ஊழியர் என்பதை மறைத்து இலவச அரசு பட்டா பெற்றவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்ற கேள்விக்கு அரசு தரப்பில் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு ஏன் முதல்நிலை அறிக்கை பதிவு செய்யப்படவில்லை?

இதுபோன்ற அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கையில் அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன. அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? பெரும்பாலான சங்கங்கள் உயரதிகாரிகள் மற்றும் ஜாதி அடிப்படையிலேயே இருக்கின்றன. அந்தச் சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள், தங்களது பணியை முறையாக செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற புகார்கள் எழுந்து அதை உறுதிப்படுத்தும் நிலையில் ஊழல் அதிகாரிகளின் மொத்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அரசுப்பள்ளி ஆசிரியர் ராஜா மற்றும் அவருக்கு பட்டா வழங்கிய வட்டாட்சியர் ஆகியோரின் சொத்து விவரங்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் போன்ற விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

- சிவகங்கை பாருக்.

Comments