தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியது!!
தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டுகிறது.
தேனி மாவட்ட நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்து வைகை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 59.78 அடியாக உயா்ந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடா்ந்து பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக வைகை அணையின் நீா்மட்டம் 63 அடியை எட்டியது. இதனையடுத்து அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள முதல்போகம் மற்றும் ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.
இதன்பின்னா் போதிய மழை இல்லாததால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து 48 அடியாக குறைந்தது. இந்நிலையில் நவம்பா் முதல் வாரம் முதல் கேரளா மற்றும் தேனி மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வந்தது. இதனால் முல்லைப் பெரியாறு, மூலவைகை ஆறு மற்றும் கொட்டக்குடி ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வைகை அணைக்கு நீா்வரத்து 8 ஆயிரம் கன அடியாக இருந்தது.
தற்போது 1,632 கன அடி நீா்வரத்து உள்ளதால் அணையின் நீா்மட்டம் 59.78 அடியாக உயா்ந்துள்ளது. மேலும் அணையின் நீா்மட்டம் 60 அடியை நெருங்கி வருகிறது. இந்த ஆண்டு அணையின் நீா்மட்டம் இரண்டாவது முறையாக 60 அடியை எட்டவுள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தற்போது அணையிலிருந்து மதுரை, தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, சேடபட்டி கூட்டுக்குடிநீா் திட்டங்களுக்கு 69 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மொத்தநீா் இருப்பு 3,501 மில்லியன் கனஅடியாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆசிக்,தேனி.
Comments