பிரான்மலையில் 2500 அடி உயரமுள்ள கார்த்திகை தீபம்!!
சிங்கம்புணரி: நவ - 30.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சி செய்த பகுதி பறம்புமலை எனப்படும் பிரான்மலை ஆகும். சங்ககால கவிஞர்களான அவ்வையார் மற்றும் கபிலரால் புகழ் பெற்றது இத்தலம்.
இங்கு குன்றக்குடி ஆதீனத்துக்குச் சொந்தமான மங்கைபாகர் - தேனம்மை கோயில் உள்ளது. 2500 அடி உயர இயற்கை சுயம்பு லிங்கமாய் காட்சியளிக்கும்
இம்மலை அடிவாரத்தில் 3 நிலைகளில் சிவாலயம் உள்ளது. மலை உச்சியில் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. திருக்கார்த்திகை தினமான நேற்று மலை உச்சியில் உள்ள கொப்பரையில் மாலை 5.30 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதில் 50 லிட்டர் கொள்ளளவுள்ள சிமெண்ட் தொட்டியில் எண்ணெய் ஊற்றப்பட்டு 8 வேட்டிகள் திரியாகச் சுற்றப்பட்டு மலை தீபம் ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாலமுருகன் சன்னதியிலும், திருமுருகன் பேரவை சார்பாக மலை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் மங்கை பாகர் கோயிலில் பாதளம், மத்திபம், ஆகயம் என மூன்று நிலைகளும் லட்சதீபம் ஏற்றப்பட்டது.
- பாரூக்,சிவகங்கை.
Comments