நஞ்சராயன் குளத்தில், பெலிகன் பறவை வலசை!! - பறவை ஆர்வலர் மகிழ்ச்சி!!
-MMH
திருப்பூர்:நஞ்சராயன் குளத்தில், கூழைக்கடா எனும் உள்நாட்டு பெலிகான் பறவை 'வலசை' வந்துள்ளன.திருப்பூர் அருகே, 440 ஏக்கர் பரப்பில், நஞ்சராயன்குளம் உள்ளது. இங்கு, பறவைகள் வசிப்பதற்கு ஏற்ற சூழல், உணவு, நீர் இருப்பு உள்ளிட்டவை காணப்படுகின்றன.
இதன் காரணமாக, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் இருந்தும், இமயமலை பகுதியில் இருந்தும், குளிர்கால வலசை நிகழ்வாக, ஆண்டுதோறும், அக்., முதல் மார்ச் வரை ஏராளமான பறவையினங்கள், இக்குளத்துக்கு வருகின்றன.அதன்படி, 150 வகையான அரிய பறவைகள், வந்து செல்வதும், ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போது, உள்நாட்டு கூழைக்கடா எனும் பெலிகன் பறவை, வலசை வந்துள்ளன.இது குறித்து, திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:பெலிகன் பறவை, ஆண்டுமுழுவதும் காணப்பட்டது. மண் திட்டுகளில் நுாற்றுக்கணக்கில் அமர்ந்திருப்பதை காணலாம்.
இவை நெடுந்துாரம் வலசை செல்லும் இயல்புடையவை. நஞ்சராயன் குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்பட்டதால், அவை வலசை வருவது தடைபட்டது. தற்போது, 70க்கும் அதிகமான பெலிகன் பறவைகள் வலசை வந்துள்ளன. நவ., மாதம் வெளிநாட்டு பறவைகள் வலசை வரும். இவ்வாறு, அவர் கூறினார்.
நாளையவரலாறு செய்திக்காக,
-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.
Comments