புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு இணைய வழி வகுப்புகள் தொடக்கம்!!

      -MMH


        புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில், முதலாமாண்டு மாணவிகளுக்கு இணையவழி வகுப்புகள் தொடங்கின.
கோவை புலியகுளம்-லட்சுமி மில்ஸ் சாலையில் இந்தக் கல்வியாண்டில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல், பி.காம் ஆகிய 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.


         இப்படிப்புகளுக்குக் கடந்த அக். 9-ம் தேதி தொடங்கிய மாணவியர் சேர்க்கை, நாளை மறுநாளுடன் (அக். 31) நிறைவு பெறுகிறது. இதுவரை சேராத மாணவிகள் இறுதிக்கட்டச் சேர்க்கையில் அசல் சான்றிதழ்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



         இதற்கிடையில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவிகளுக்கு இணையவழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளனஇதுகுறித்துக் கோவை மண்டலக் கல்லூரி இணை இயக்குநர் கலைச்செல்வி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொறுப்பாளர் மாரிமுத்து ஆகியோர் கூறியதாவது:


        ''பி.காம். படிப்பில் 60 பேர், கணினி அறிவியல் படிப்பில் 27 பேர், தமிழ்ப் படிப்பில் 24 பேர், ஆங்கிலப் படிப்பில் 12 பேர், கணிதப் படிப்பில் 6 பேர் என 129 பேர் முதலாமாண்டில் சேர்ந்துள்ளனர்.


         கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி, முதலாமாண்டு மாணவிகளுக்கு இணையவழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.


         தற்போது திருப்பூரில் உள்ள எல்ஆர்ஜி அரசு கலைக் கல்லூரி ஆசிரியர்கள், கூகுள் மீட் வழியாக மாணவிகளுக்குப் பாடம் நடத்துகின்றனர். வருகைப் பதிவையும் பராமரிக்கிறோம். இக்கல்லூரிக்கென ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, அவர்கள் மூலமாக மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


         129 மாணவிகளில் 112 பேர் ஸ்மார்ட் போன்கள் வைத்துள்ளனர். மீதமுள்ளவர்களை ஸ்மார்ட் போன் வாங்கிக் கொண்டு இணையதள வகுப்பில் இணையுமாறு அறிவுறுத்தியுள்ளோம். மாணவிகள் இணையவழி வகுப்பில் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்''.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments