ஏழை மாணவர்களுக்கான கட்டணம்!! - தனியார் பள்ளிகளுக்கு ரூ.304 கோடி!!
-MMH
சென்னை : தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, 2018 - 19ம் ஆண்டுக்கான கல்வி கட்டணமாக, 303.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒவ்வொரு தனியார் பள்ளியிலும், 25 சதவீத இடங்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசு ஏற்க வேண்டும். கடந்த, 2016 - 17ம் ஆண்டு, ஒரு மாணவருக்கான கல்வி செலவு தொகை, 25 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. அதுவே, அடுத்த கல்வியாண்டில், 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: மாணவர்களுக்கான கல்வி செலவு தொகையை, 2017 முதல், 2019 வரைக்கும், மறு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும். மாணவர்கள் சேர்ந்த பின், ஜூன் மாதத்தில், 50 சதவீதம்; டிசம்பரில், 25 சதவீதம்; மீதி தொகையை ஏப்ரலில், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.அத்துடன், 2018 - 19, 2019 - 20ம் ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'கல்வி செலவு நிலுவை தொகையை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, ஆறு வாரங்களில், அரசு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.
Comments